குற்றச்சாட்டுகளைத் திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்ட அமைச்சர்கள்

2 mins read
cf253b3c-f266-4137-9dfc-e9648d4e5933
பூஜியேன் குண்டர் கும்பல் உறுப்பினர் சூ ஹாய்ஜின் கலந்துகொண்ட இரவு விருந்தில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங்கும் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட்டும் இருந்ததைக் காட்டும் படங்கள் இணையத்தில் வலம் வந்தன. - படங்கள்: இன்ஸ்டகிராம்

தங்கள் மீது சுமத்தப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுகளைத் திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு ஃபேஸ்புக் பயனரான செங் சியா ஹுவாட்டிடம் சுகாதார அமைச்சர் ஓங் யி காங்கும் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட்டும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அவ்வாறு செய்யாவிடில் செங் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர்கள் இருவரும் தெரிவித்தனர்.

ஃபூஜியேன் குண்டர் கும்பல் உறுப்பினரான சூ ஹாய்ஜின், சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளில் எடுபட்டது தெரிந்தும் இரு அமைச்சர்களுக்கும் கண்டும் காணாதது போல் இருந்துவிட்டதாக செங் குற்றம் சுமத்தினார்.

சு யார் என்று தெரியாதது போல நடித்ததாகவும் ஊழலில் ஈடுபட்டதாகவும் சு போன்ற குற்றவாளிகளைப் பாதுகாக்கும் கட்டமைப்பில் அங்கம் வகித்ததாகவும் அமைச்சர்கள் இருவர் மீதும் செங் குற்றம் சுமத்தினார்.

இந்நிலையில், தங்கள் வழக்கறிஞர்கள் செங்கிடம் கடிதங்கள் அனுப்பிவிட்டதாக இரு அமைச்சர்களும் திங்கட்கிழமை (மே 12) கூட்டறிக்கை வெளியிட்டனர்.

பொய்க் குற்றச்சாட்டுகளைத் திரும்ப பெற்றுக்கொள்ளாவிட்டால், செங் மீது அவதூறு வழக்கு தொடுக்கப்படும் என்று அவர்கள் கூறினர்.

செங் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் ஆதாரமற்றவை என்றும் இருவரும் தெரிவித்தனர்.

இதற்கிடையே, என்டியுசி தலைமைச் செயலாளர் இங் சீ மெங்கும் ஓர் அறிக்கையை திங்கட்கிழமை மாலை வெளியிட்டார்.

அதில், தமது வழக்கறிஞர் மூலம், திரு செங் தனது பொய்யான குற்றச்சாட்டுகளை மீட்டுக்கொள்ளவும், மே 16ஆம் தேதிக்கு மன்னிப்பு கேட்கவும், திரு செங் ஒரு தொகையை முன்மொழியுமாறும் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் திரு இங் தெரிவித்தார்.

“அந்த இழப்பீட்டுத் தொகையை நான் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்குவேன். அவர் அவ்வாறு செய்யாவிட்டால், இந்த பொய்யான, தவறாக வழிநடத்தும், அவதூறான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக திரு செங் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நான் உள்ளேன்,” என்றும் திரு இங் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்