தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஓங் யி காங்: துரிதமாகச் செயல்படக்கூடிய அரசாங்கம் தேவை

2 mins read
a1e43a15-a9b9-41b7-ac51-2854da4f719f
சுகாதார அமைச்சர் ஓங் யி காங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நாடாளுமன்றத்தில் கூடுதல் எதிர்க்கட்சியினர் இருந்தால் அது சிங்கப்பூரின் அரசியல் சூழலைப் பாதிக்குமா என்று சுகாதார அமைச்சர் ஓங்கிடம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஓங், உலகளாவிய நெருக்கடிநிலை மற்றும் பொருளியல் நிச்சயமின்மை அதிகரித்து வருகையில், துரிதமாகச் செயல்படக்கூடிய அரசாங்கம் சிங்கப்பூருக்குத் தேவை என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிங்கப்பூரர்கள் நன்கு புரிந்துவைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

கொவிட்-19 கிருமிப் பரவலைக் கட்டுக்குள் வைத்திருக்க நடைமுறைப்படுத்திய விதிமுறைகளுக்கு உட்பட்டு சிங்கப்பூரர்கள் நடந்துகொள்வர் என்று அரசாங்கம் நம்பிக்கை வைத்திருந்ததை அவர் சுட்டினார்.

நாட்டின் நலனைக் காக்க எது தேவையோ அதையே சிங்கப்பூரர்கள் செய்வர் என்றார் அமைச்சர் ஓங்.

“சிங்கப்பூருக்கு எது நல்லது என்பது சிங்கப்பூரர்களுக்குத் தெரியும் என்று அரசாங்கம் நம்புகிறது. அதே போல தேர்தலின்போது அவர்கள் சரியான முடிவு எடுப்பர் என்று நம்புகிறோம். தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இதனை சிங்கப்பூரர்கள் நன்கு அறிவர். எனவே, திடமான, துரிதமாகச் செயல்படக்கூடிய அரசாங்கம் தேவை.

“செயல்பட முடியாத, முடங்கிக் கிடக்கும் அரசாங்கம் இருக்கக்கூடாது. அத்தகைய அரசாங்கத்தால் சிங்கப்பூரை முன்னோக்கிக் கொண்டு போக முடியாது. இதைப் புரிந்துகொண்டு சிங்கப்பூரர்கள் அதற்கு ஏற்ப செயல்படுவர் என்று உறுதியாக நம்புகிறேன்,” என்று திரு ஓங் கூறினார்.

கூடுதல் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவை என்று தொடர்ச்சியாகப் பல தேர்தல்களில் மக்கள் விரும்பியது தமக்குத் தெரியும் என்றார் அவர்.

இதன் காரணமாக ஒருமுறை தேர்தலில் தாம் தோல்வி அடைந்ததை அவர் நினைவுகூர்ந்தார்.

2011ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அல்ஜுனிட் குழுத் தொகுதியில் போட்டியிட்டு பாட்டாளிக் கட்சியிடம் தோல்வி அடைந்த மக்கள் செயல் கட்சிக் குழுவில் திரு ஓங் அங்கம் வகித்தது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டும் என்று மக்கள் கருதினாலும் வலிமைமிக்க, துரிதமாகச் செயல்படக்கூடிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதே பொதுத் தேர்தலின் இலக்கு என்று அமைச்சர் ஓங் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்