தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தனியார் காப்புறுதிகள் தொடர்பாகச் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது: அமைச்சர் ஓங்

2 mins read
63495e5b-88d7-482b-bebe-0ac5e9cb700a
சுகாதார அமைச்சர் ஓங் யீ காங். - படம்: ஓங் யீ காங்/ ஃபேஸ்புக்

தனியார் சுகாதாரக் காப்புறுதி நிறுவனங்களும் தனியார் மருத்துவமனைகளும் ஒன்றுக்குள் ஒன்றாகப் பிணைந்துள்ளன, இது நோயாளிகள் உள்ளிட்ட பல தரப்புகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) அமைச்சர் ஓங், தமது ஃபேஸ்புக் பதிவு மூலம் இக்கருத்தைப் பதிவிட்டார்.

“தனியார் சுகாதாரக் காப்புறுதி நிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் நிலைகுறித்து இதற்கு முன்னரே அக்கறைத் தெரிவித்திருந்தேன். தற்போதுள்ள திட்டம் நீண்ட நாள்களுக்கு நிலைக்காது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் தங்களிடம் மருத்துவக் காப்புறுதி வாங்கியோர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும்போது அவர்களுக்கான முன்கூட்டியே வழங்கப்படும் அங்கீகாரச் சான்றிதழ் முறையைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக கிரேட் ஈஸ்டர்ன் காப்புறுதி நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்தச் சம்பவத்தையடுத்து அமைச்சர் ஓங் சமூக ஊடகத்தில் தனது கருத்தைப் பதிவிட்டார்.

“காப்புறுதி நிறுவனங்களின் நடவடிக்கைகள் அக்கரைக்குரியது, இருப்பினும் அவர்களது கண்ணோட்டத்திலிருந்தும் பிரச்சினையைப் பார்க்க வேண்டும். தனியார் சுகாதார நிறுவனங்களின் நிதி கட்டமைப்பை நிலையான ஒன்றாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்,” என்றார் திரு ஓங்.

சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் அது எல்லாத் தரப்புகளுக்கும் நட்டத்தை ஏற்படுத்தும் என்றார் அவர்.

தற்போது சுகாதார அமைச்சு நிலைமையைச் சீர்செய்யத் தகுந்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்றார் அமைச்சர் ஓங்.

கிரேட் ஈஸ்டர்ன் காப்புறுதியின் தற்காலிக நிறுத்தம் ஜூன் 17லிருந்து நடப்புக்கு வந்தது.

தனது மருத்துவர் பட்டியலில் உள்ள மருத்துவர்களுக்கு கிரேட் ஈஸ்டர்ன் காப்புறுதி நிறுவனம் அத்தகவலை இவ்வாரத் தொடக்கத்தில் தெரிவித்தது.

மற்ற தனியார் மருத்துவமனைகளுடன் ஒப்பிடும்போது மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை, மவுண்ட் எலிசபெத் நொவீனா மருத்துவமனை ஆகியவற்றின் மருத்துவக் கட்டணம் அதிகமாக இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று கிரேட் ஈஸ்டர்ன் காப்புறுதி நிறுவனம் கூறியது.

நோயாளிக்கு அளிக்கப்படும் மருத்துவச் சிகிச்சையையும் அதற்கான செலவுகளையும் ஏற்றுக்கொள்வதாகக் காப்புறுதி நிறுவனம் உறுதிப்படுத்துவதே இந்த முன்கூட்டியே வழங்கப்படும் அங்கீகாரமாகும்.

சிகிச்சை தொடங்குவதற்கு முன்பு அது வழங்கப்படும்.

இதற்கிடையே, கிரேட் ஈஸ்டர்ன் காப்புறுதி நிறுவனம் எடுத்துள்ள இந்த முடிவு அதனிடம் மருத்துவக் காப்புறுதி வாங்கியோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்