புக்கிட் கான்பரா உணவங்காடி நிலையத்தைச் சேர்ந்த கடைக்காரர்கள், தங்கள் மூலப்பொருள்களைக் கூடைகளில் வைப்பதற்காகக் கட்டணம் செலுத்துவதில்லை.
அத்துடன், உணவுப்பொருள்கள் வழங்காமல் இருப்பதாலும் அங்காடிகள் தண்டனைக்கு உள்ளாகவில்லை என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
அந்த நிலையத்தைச் சேர்ந்த உணவங்காடிகள் நடத்தப்படும் விதம் குறித்து கவலைப்படுவதாகப் புகழ்பெற்ற உணவு விமர்சகர் கே.எஃப். சீத்தோ பதிவு வெளியிட்டதைத் தொடர்ந்து திரு ஓங் திங்கட்கிழமையன்று பதிலளித்தார்.
ஒவ்வொரு கடைக்குப் பின்னாலும் வைக்கப்பட்டுள்ள நீல நிறக் கூடைகளைப் பயன்படுத்த மாதத்திற்கு 70 வெள்ளி பணத்தைச் செலுத்தும் கட்டாயத்திற்கு உணவு நிலையத்தின் கடைக்காரர்கள் உள்ளானதாகத் திரு சீத்தோ கூறியுள்ளார்.
அத்துடன், உணவு கடைக்காரர்கள் தங்கள் சொந்த செலவில் 60 இலவச உணவுகளை வழங்கும் கட்டாயத்திற்கு ஆளானதாக உள்ளூர் உணவு பற்றிய விவரங்களைக் கொண்டுள்ள மாக்கான்சூத்ராவின் நிறுவனரான திரு சீத்தோ கூறி, இந்தக் கொள்கை அபத்தமானது என்றும் சாடினார்.
வசதி குறைந்தோர்க்கு மட்டும் இல்லாமல் எல்லாருக்கும் 3.50 வெள்ளி வரையிலான உணவை அவசியமாக வழங்கும் நிலைக்கு உணவங்காடிகள் ஆளானதாக திரு சீத்தோ கூறினார்.
2023ஆம் ஆண்டு மார்ச் மாதம், கட்டுப்படியான உணவுத் திட்டத்தை தேசிய வளர்ச்சி அமைச்சும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் தொடங்கின.
அத்திட்டத்தின்கீழ் சிங்கப்பூரர்களுக்குக் கிட்டத்தட்ட 3.50 வெள்ளிக்கும் குறைவான உணவு விற்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
திரு சீத்தோவின் பதிவுகளைப் பற்றி தெரிந்துகொண்டதை அடுத்து அவர் சம்பவத்தை விசாரித்ததாக, செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களை வழிநடத்தும் திரு ஓங் கூறினார்.
60 இலவச உணவு வகைகளை உணவங்காடிகள் கொடுக்கவேண்டும் என்ற திரு சீத்தோவின் கூற்று நிலவரத்தை முழுமையாக எடுத்துரைக்கவில்லை என்று திரு ஓங் கூறினார்.
தொடக்கத்தில் வசதி குறைந்தோர்க்கு 30 உணவுப்பொருள்களை வழங்க அங்காடிகள் ஒப்புக்கொண்டதாகக் குறிப்பிட்ட அமைச்சர் ஓங், அவர்களது மூன்று ஆண்டு குத்தகைக்காக அந்த எண்ணிக்கை 100க்கு மாற்றப்பட்டதாகக் கூறினார்.
நல்ல நோக்கத்திற்காக அந்தத் திட்டம் தொடங்கப்பட்டதாகக் கூறிய திரு ஓங், அத்தகைய உணவுகளை இலவசமாக வழங்காதோர்க்கு எந்தத் தண்டனையும் இல்லை என்று கூறினார்.
அந்தத் திட்டம் இன்னும் தொடங்கப்படவே இல்லை என்றும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
“நம் உணவங்காடிகளுக்காக கே.எஃப்.சீத்தோ கவலைப்படுவதைப் பாராட்டுகிறேன். நமது உணவங்காடிக் கலாசாரத்தைத் துடிப்பாக வைத்துக்கொள்ளும் அவரது ஆர்வத்தை நானும் பகிர்கிறேன். ஆனால் யாரையும் மட்டம் தட்டாமல் இதனைச் செய்யலாமே,” என்றார் திரு ஓங்.

