‘தி ஆன்லைன் சிட்டிசன்’ செய்தி இணையத்தளத்தில் அதன் தலைமை ஆசிரியருக்கு எதிராக சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம், மனிதவள அமைச்சர் டான் சீ லெங் ஆகியோர் அவதூறு வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கு அடுத்த நிலையை எட்டியுள்ளது.
ஏப்ரல் 1ஆம் தேதியன்று வழக்கிற்கு முந்தைய கலந்துரையாடல் நடைபெற இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
டெரி ஸு என்று அழைக்கப்படும் திரு ஸு யுவான்சென்னுக்கு எதிராக அமைச்சர் சண்முகமும் டாக்டர் டான்னும் ஜனவரி 6ஆம் தேதியன்று அவதூறு வழக்கு தொடுத்தனர்.
அமைச்சர்களைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர்களில் திரு தவிந்தர் சிங்கும் திரு டேவிட் ஃபோங்கும் அடங்குவர்.
திரு ஸுவை வழக்கறிஞர்கள் யாரும் பிரதிநிதிக்கவில்லை என்று நீதிமன்ற ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
தங்கள் சொத்து பரிவர்த்தனைகள் தொடர்பாக அவதூறு பரப்பும் செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர்கள் இருவரும் 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தெரிவித்தனர்.
சிங்கப்பூரில் உயர் ரக பங்களா வீடுகளின் பரிவர்த்தனைகளில் பல ரகசியங்கள் சூழ்ந்திருப்பதாக 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதியன்று புளூம்பர்க் செய்தி வெளியிட்டது.
தொடர்புடைய செய்திகள்
அந்த செய்தியை திரு லோ டி வெய் எழுதினார்.
அமைச்சர் சண்முகம், அமைச்சர் டான் ஆகியோரின் சொத்து பரிவர்த்தனைகள் பற்றி அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஜனவரி 6ஆம் தேதியன்று புளூம்பர்க் நிறுவனத்துக்கும் திரு லோவுக்கும் எதிராக இருவரும் அவதூறு வழக்கு தொடுத்தனர்.