இணையவழி குற்றவியல் தீங்குச் சட்டம் பிப்ரவரி 1ஆம் தேதிமுதல் நடப்புக்கு வரும்போது, சட்டத்தை மீறும் வகையில் அமைந்த இணையப் பதிவுகளை அகற்ற அரசாங்கம் உத்தரவிட முடியும்.
குற்றம் புரிய வகைசெய்யும் இணையப் பதிவுகளை அகற்றுவதற்கான சட்ட மசோதாவுக்கு 2023ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இணையத்தில் உருவெடுத்துவரும் குற்றவியல் தீங்கைக் கையாளுதல், மோசடிகள், தீங்கிழைக்கும் இணைய நடவடிக்கைகளுக்குச் சிறப்பு நிபந்தனைகளை வரையறுத்தல் ஆகியவற்றைக் கையாள இந்தச் சட்டம் வகைசெய்யும்.
புதிய சட்டத்தின்கீழ், இணையத்தளங்களில் காணப்படும் குற்றவியல் நடவடிக்கைகள் குறித்து சிங்கப்பூர் பயனாளர்கள் அறிந்துகொள்வதற்கு அரசாங்கம் கட்டுப்பாடு விதிக்கும் வகையில் உத்தரவுகளைப் பிறப்பிக்கலாம்.
குறிப்பிட்ட ஒரு குற்றத்தின் தொடர்பாக ஓர் இணைய நடவடிக்கை அமைந்துள்ளது என்று நியாயப்படுத்தக்கூடிய சந்தேகம் எழுந்தாலே இணையச் சேவை வழங்குநர், நிறுவனம், தனிநபர் என எந்த ஒரு தரப்புக்கும் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம்.
பயங்கரவாதம், உள்நாட்டுப் பாதுகாப்பு, இன மற்றும் சமய நல்லிணக்கம், போதைப் பொருள், வன்முறை, மோசடிகள் ஆகியவை இதில் அடங்கும்.
மோசடி நிகழ்வதற்கு முன்னதாக நடக்கும் ஒருசில இணைய நடவடிக்கைகள் குறித்து சந்தேகம் எழுந்தால் உத்தரவுகள் பிறப்பிக்க அனுமதிக்கப்படலாம்.
2023ஆம் ஆண்டின் முதல் பாதியில் 22,339 மோசடிச் சம்பவங்கள் குறித்துப் புகார் அளிக்கப்பட்டது. 2022ன் முதல் பாதியில் இந்த எண்ணிக்கை 13,576ஆக இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
நடைமுறைக் கோட்பாடுகளையும் ஆணைகளையும் சட்டம் அறிமுகப்படுத்துவதன்வழி மோசடிகளுக்கும் தீங்கிழைக்கும் இணைய நடவடிக்கைகளுக்கும் எதிரான இணையச் சேவைகளுடன் பங்காளித்துவத்தை வலுப்படுத்திக்கொள்ள முடியும் என்று உள்துறை அமைச்சு தெரிவித்தது. இருப்பினும், இவை பின்னாளில் நடப்புக்கு வரும் என்று கூறப்பட்டது.