விநியோகச் சேவை நிறுவனங்களின் பெயரில் ஆப்பிள் ஐமெசேஜ் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பி பொதுமக்களை ஏமாற்றி வந்த கும்பலிடம் 251 பேர் $1.2 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை இழந்துள்ளதாகக் காவல்துறை எச்சரித்துள்ளது.
டிஎச்எல், நிஞ்சா வேன், ஜே&டி எக்ஸ்பிரஸ், சிங்போஸ்ட் போன்ற பிரபலமான நிறுவனங்களின் பெயர்களைப் போன்று தோற்றமளிக்கும் வெளிநாட்டு எண்கள் அல்லது மின்னஞ்சல் முகவரிகளிலிருந்து குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகின்றன.
முகவரி தவறாக இருப்பதால் பொட்டலத்தை விநியோகிக்க முடியவில்லை என்றும் அதைப் புதுப்பிக்க குறிப்பிட்ட இணைய இணைப்பைச் சொடுக்க வேண்டும் என்றும் அதில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஆப்பிள் ஐமெசேஜின் பாதுகாப்பு அம்சங்களைத் தாண்டிச் செல்ல ‘ஒய்’ அல்லது ‘1’ எனப் பதிலளிக்குமாறு பயனர்களிடம் தெரிவிக்கப்படும். அந்த இணைப்புகளைச் சொடுக்கும்போது, உண்மையான விநியோகச் சேவை நிறுவனத்தின் பக்கத்தைப் போன்று தோன்றும் போலி இணையப்பக்கத்துக்கு பயனீட்டாளர்கள் அழைத்துச் செல்லப்படுவர்.
அங்கு விநியோகக் கட்டணம் செலுத்தக் கோரி, கடன் அட்டை மற்றும் இணைய வங்கி விவரங்களைப் பெற்று மோசடிக் கும்பல் பணத்தைத் திருடிவிடுகிறது. பொதுவாக, விநியோகச் சேவை நிறுவனங்கள் ஐமெசேஜ் மூலம் வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்வதில்லை என்று காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
பொதுமக்கள் தங்களது ஐமெசேஜ் செயலியில் அடையாளம் தெரியாத எண்களிலிருந்து வரும் குறுஞ்செய்திகளைப் பிரித்துக் காட்டும் அம்சத்தைச் செயல்படுத்துமாறும் சந்தேகத்துக்குரிய குறுஞ்செய்திகளைப் பற்றி உடனடியாகக் காவல்துறைக்குத் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


