பெற்றோரின் இறப்புக்குப் பின்னரும் தொடர்புத்திறன் குறைபாடுள்ளோரது வாழ்க்கை சுமுகமாக இருக்கத் திட்டமிட உதவும் வகையில், செயல்விளக்கத்துடன் கூடிய மின்னூல் (‘Life After Death’ Playbook) சோதனை முயற்சியாக வெளியிடப்பட்டுள்ளது.
குறைபாடுள்ள பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலை அவர்களின் பெற்றோர்களுக்கும் இருந்தாலும், அதற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த தெளிவான திட்டம் இல்லாமல் தவிப்போர்க்குக் கைகொடுக்கும் வண்ணம் இவ்வழிகாட்டி நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறைபாடுள்ளோரின் கல்வி, பணி உள்ளிட்டவற்றைச் சரிவரத் திட்டமிடுவதுபோல, அவர்களின் எதிர்கால நலன் கருதி அவர்களது உடல்நலம் குறித்த விவரங்கள், நிதி மேலாண்மைத் திட்டங்கள், வீடு, அவசரகாலத் தொடர்பு விவரங்கள், பிள்ளைகளின் விருப்பு வெறுப்புகள் என அனைத்தையும் ஒரே கோப்பில் சேகரித்து வைப்பது அடுத்து வரும் பராமரிப்பாளருக்குப் பேருதவியாக இருக்கும்.
இதனை உறுதிப்படுத்தும் நோக்கில் தொடர்புத்திறன் குறைபாட்டுக்கான வளமை நிலையம், தொடர்புத்திறன் குறைபாடு குறித்த விழிப்புணர்வு மாதத்தையொட்டி இம்முன்னோடித் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
வழக்கறிஞர்கள், நிதி நிபுணர்கள் உள்ளிட்டோரின் உதவியுடன், 20 பெற்றோர் / பராமரிப்பாளர்களின் உள்ளீடுகளை அடிப்படையாகக் கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
தொடர்புத்திறன் குறைபாட்டுக்கான வளமை நிலையத்தில் வியாழக்கிழமை (மார்ச் 27) நடைபெற்ற நூல் அறிமுக நிகழ்ச்சியில் அந்நிலையத்தின் தலைவரும், தொடர்புத்திறன் குறைபாட்டுக்கான சங்கத்தின் தலைவருமான திருவாட்டி டெனிஸ் புவா பங்கேற்றார்.
மேயர் புவாவின் யோசனைப்படி, திட்ட இயக்குநரும் மனநல வல்லுநருமான டாக்டர் சிம் சீ லின் தலைமையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
சுமுகமான வாழ்வு, உடல்நலம், இருப்பிடம், தொடர்புகள், நிதி விவரம் என ஐந்து தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலை ஒவ்வொரு பராமரிப்பாளரும் தங்களது வசதிக்கேற்ப நிரப்பிக்கொள்ளலாம் என்றும் இது ஒரு பெருந்திட்டத்திற்கான தொடக்கப்புள்ளி வைக்கும் என்றும் சொன்னார் மத்திய சிங்கப்பூர் வட்டார மேயருமான திருவாட்டி புவா.
தொடர்புடைய செய்திகள்
இந்த இணையவழி நூலில் முக்கிய விவரங்களை நிரப்புவதில் சிலருக்குத் தயக்கம் இருக்கலாம் என்பதால், ‘பிடிஎஃப்’ கோப்பு வடிவத்தில் பதிவிறக்கம் செய்து கையால் எழுதியும் அதனை நிரப்ப முடியும்.
இந்நூல் 2025ஆம் ஆண்டின் இறுதியில் பயன்பாட்டுக்கு வரும். இந்நூல் குறித்தும் அதன் பயன்பாட்டு வழிமுறைகள் குறித்தும் பெற்றோருக்குப் பயிலரங்குகள் நடத்தவுள்ளதாக தொடர்புத்திறன் குறைபாட்டுக்கான வளமை நிலையம் தெரிவித்துள்ளது.
பெற்றோர்கள் அந்நூலைப் பயன்படுத்தி, அது குறித்த தங்கள் பின்னூட்டங்களைத் தெரிவிக்க வேண்டும் என்றும் அதனைத் தொடர்ந்து மேம்படுத்தி, தொடர்புடையதாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் மேயர் புவா கேட்டுக்கொண்டார்.