இணையம் வழியாக மருத்துவச் சேவை வழங்கும் எட்டு நிறுவனங்களிடம் விதிமீறல்கள் தொடர்பாக தற்போது விசாரணை நடத்தி வருவதாகச் சுகாதார மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்தார்.
மருத்துவ சேவையில் குளறுபடி, சேவை குறித்து தவறான விளம்பரம் ஆகியவற்றின்கீழ் அவர்கள் விசாரிக்கப்பட்டுவருவதாக நாடாளுமன்றத்தில் ஜனவரி 7ஆம் தேதி டாக்டர் ஜனில் தெரிவித்தார்.
மூன்று மருத்துவச் சேவை நிறுவனங்கள்மீது அமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அண்மையில் MaNaDr எனும் இணையம் வழி மருத்துவச் சேவை வழங்கும் நிறுவனத்தின் உரிமத்தைச் சுகாதார அமைச்சு ரத்து செய்தது.
100,000க்கும் அதிகமான இணையம் வழி மருத்துவச் சேவைகளை ஒரு நிமிடத்திற்கும் அதற்குக் கீழும் அது வழங்கியுள்ளது. இது கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் எடுக்கப்பட்ட தரவு மட்டுமே.
MaNaDr போலவே இணையம் வழி மருத்துவச் சேவைகள் வழங்கும் மற்ற சேவைகளின் தரம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்தத் தகவல்களை டாக்டர் ஜனில் தெரிவித்தார்.
அந்த எட்டு நிறுவனங்களிடமும் இரண்டு வகைகள் வழியாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
முதல் வழி, மருத்துவர்கள் நோயாளிகளிடம் தகுந்த முறையில் பேசாமல் மருத்துவ விடுப்பு தருகிறார்களா அல்லது முதல்முறையாக இணையம் வழி சேவை நாடுவோரிடம் காணொளி வழியாகச் சந்திக்காமலே மருத்துவ சேவை வழங்குகிறார்களா என்பது.
தொடர்புடைய செய்திகள்
இரண்டாவது வழி, தவறாக விளம்பரங்களைப் பயன்படுத்தி மக்களை ஈர்ப்பது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் தவறுகளுக்கு ஏற்றவாறு நிறுவனங்களுக்குத் தண்டனை வழங்கப்படுகிறது. தற்காலிகமாகச் சேவை ரத்து, கடுமையான எச்சரிக்கை ஆகியவை அதன்கீழ் வரும் என்று டாக்டர் ஜனில் தெரிவித்தார்.
மேலும், தவறான நடத்தைக் கொண்ட சந்தேகிக்கப்படும் மருத்துவர்களைச் சிங்கப்பூர் மருத்துவ மன்றம் விசாரணை நடத்தும் என்று அவர் கூறினார்.
2024ஆம் ஆண்டு சுகாதார அமைச்சிடம் 20 இணையவழி மருத்துவ சேவை நிறுவனங்கள் குறித்து 59 புகார்கள் வந்தன.

