உதவி தேவைப்படுவோர் தகவல்களைத் தேடவேண்டிய அல்லது படிவத்தை நிரப்பவேண்டிய அவசியம் இல்லாமல், ‘SupportGoWhere’ இணையத்தளத்தில் தங்கள் நிலைமை என்னவென்று சொந்த வார்த்தைகளில் எழுதி, பொருத்தமான ஆதரவுத் திட்டங்கள் பற்றிய பரிந்துரைகளை விரைவில் பெறலாம்.
அரசாங்கச் சேவைகளை மேம்பட்ட முறையில் வழங்குவதற்காக, இந்தத் தளத்தின் ஆதரவு பரிந்துரைப்புக் கருவியில் “LLM” எனும் பரந்த மொழி முன்மாதிரிகள் முன்னோட்டமாகப் பயன்படுத்தப்படுவதாகத் தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ வியாழக்கிழமை தெரிவித்தார்.
கொவிட்-19 கிருமிப்பரவல் தொடங்கிய 2020ல் ‘SupportGoWhere’ இணையத்தளம் அறிமுகமானது. சமூகச் சேவைகளையும் அரசாங்க ஆதரவுத் திட்டங்களையும் கண்டறிவதற்கும் அவற்றுக்கு விண்ணப்பம் செய்வதற்கும் சிங்கப்பூரர்கள் இந்தத் தளத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
குடிமக்களுக்கு அரசாங்கச் சேவைகள் வழங்கப்படும் முறையை உருமாற்றுவதற்காக, செயற்கை நுண்ணறிவு புத்தாக்கத்துடன் ‘SupportGoWhere’ இணையத்தளம் மேம்படுத்தப்படுவதாகத் திருமதி டியோ கூறினார்.
சேண்ட்ஸ் எக்ஸ்போ மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ஐபிஎம் நிறுவனத்தின் “திங்க் சிங்கப்பூர் 2023” நிகழ்ச்சியில் திருமதி டியோ பேசினார்.
அறிவார்ந்த தேசத் திட்டம், இணையப்பாதுகாப்பு ஆகியவற்றுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திருமதி டியோ, சிங்கப்பூர் எதிர்நோக்கும் சவால்களுக்குத் தொழில்நுட்பத்தால் தீர்வளிக்க முடியும் என்று குறிப்பிட்டார்.
“பெரும் வாய்ப்புகளும் சவால்களும் வழங்கும் உருமாற்றத் தொழில்நுட்பம்,” என்று செயற்கை நுண்ணறிவை அவர் வர்ணித்தார்.
எடுத்துக்காட்டாக, செயற்கை நுண்ணறிவால் நாட்டின் மூப்படையும் மக்களது சுகாதாரப் பராமரிப்புத் தேவைகளை நிறைவேற்ற முடியும். நோயாளியின் மருத்துவ விவரங்களின் அடிப்படையில் ஆகப் பொருத்தமான அளவில் மருந்துகளை வழங்க செயற்கை நுண்ணறிவு துணைபுரிய முடியும்.
தொடர்புடைய செய்திகள்
நகர்ப்புறத் திட்டமிடலின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கும் செயற்கை நுண்ணறிவை சிங்கப்பூர் பயன்படுத்துகிறது. நகரச் சீரமைப்பு ஆணையம் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பொதுமக்களின் கருத்துகளிலிருந்து அக்கறைக்குரிய அம்சங்களின் அடிப்படையில் தகவல் சேகரிக்கிறது.
சிங்கப்பூரில் 85% பொது அமைப்புகள் 2022 நிலவரப்படி, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும். குறைந்தது ஓர் “உயர் பயன்மிக்க” தீர்வைச் செயல்படுத்தி இருப்பதாகவும் திருமதி டியோ குறிப்பிட்டார். இன்னும் பல திட்டங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.

