இணையம் வழி ஆடைகளை வாடகைக்கு விட்டு வந்த ‘ஸ்டைல் தியரி’ நிறுவனம் மூடப்படுவதாக செப்டம்பர் மாதம் 30ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டது. இது சிங்கப்பூரை மையமாகக் கொண்ட நிறுவனம். உயர்ந்து வரும் செலவினம், முதலீட்டாளர்கள் பின்வாங்கியது ஆகியவற்றை மூடலுக்கு காரணம் என்று அது கூறியது.
ஆடை, பைகள் ஒருமுறை வாடகைச் சேவையை அந்நிறுவனம் வழங்கியது. அதுமட்டுமல்லாமல், மாதக் கட்டணம் செலுத்தி ஒரு மாதத்துக்கு குறிப்பிட்ட அளவு ஆடைகளை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம்.
செப்டம்பர் 30ஆம் தேதியிலிருந்து அனைத்து வாடகை, உறுப்பியம், ஆதரவு மற்றும் சேவைகள் முடிவுக்கு வருவதாக ‘ஸ்டைல் தியரி’ இணையப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாதக் கட்டணம் செலுத்திய வாடகையாளர்களுக்கு எஞ்சிய தொகை திருப்பித் தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாடகைக்கு எடுத்த ஆடைகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், மேல் விவரங்கள் வெளியிடப்படும் வரை அவற்றை வைத்திருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஆனால், வாடகைக்கு எடுக்கப்பட்ட பைகளைத் திருப்பிக் கொடுக்கும்படி வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
அவை நிறுவனத்துக்குச் சொந்தமானவை அல்லது குறிப்பிட்ட தனிநபர்களுக்குச் சொந்தமானவை என்று நிறுவனம் கூறியது.
நொடித்துப்போகக்கூடிய நிலையை நிறுவனம் எதிர்நோக்குவதால் வாடிக்கைக்காக ஆடைகளை அனுப்பியவர்களிடமும் வாடிக்கையாளர்களிடமும் பணத்தை நேரடியாகத் திருப்பித் தர இயலாது என்று ‘ஸ்டைல் தியரி’ நிறுவனம் தெரிவித்தது.