இணையத்தில் ‘ஏஐ’ துணையுடன் அரசாங்கத் தகவல்கள் மொழிபெயர்ப்பு

தமிழ், சீனம், மலாய் மொழிகளில் சோதனை முயற்சி

இணையத்தில் ‘ஏஐ’ துணையுடன் அரசாங்கத் தகவல்கள் மொழிபெயர்ப்பு

படம்: ஓப்பன் கவர்மெண்ட் புரோடக்ஸ்

26 Jun 2026 - 3:17 pm

2 mins read

செயற்கை நுண்ணறிவுத் திறனைக்கொண்டு இணையத்தில் அரசாங்கத் தகவல்களை அதிகாரபூர்வ மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யும் சோதனைத் திட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) நிகழ்நேரத்தில் தொடங்கப்பட்டது.

சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் இலக்குடன் இந்தச் சோதனை முயற்சி தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சினால் மேற்கொள்ளப்படுகிறது.

‘பாலிகுளாட்’ (Polyglot) என்ற பெயரில் அமைச்சின் இணையத்தளத்தில் இயங்கும் அந்த செயற்கருவியைப் பயன்படுத்தி ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் ஆகிய நான்கு மொழிகளில் பொதுமக்கள் அரசாங்கத் தகவல்களைப் பார்வையிடலாம்.

அரசாங்க தொழில்நுட்ப முகவையின் (GovTech) ஒரு பிரிவான வெளிப்படையான அரசாங்க சாதனங்கள் (OGP) அமைப்பின் ஐவர் அடங்கிய குழு, இந்த சோதனைத் திட்டத்தை மேம்படுத்தியுள்ளது.

எதிர்காலத்தில் அரசாங்கத்தின் அனைத்து இணையத் தளங்களிலும் அவற்றின் மின்னிலக்கச் சேவைகளைப் பயன்படுத்துவோருக்கு அதிகாரபூர்வ மொழிகளில் சேவை வழங்கும் திட்டத்தின் முதல்படி இதுவாகும்.

சோதனை முயற்சிக்குக் காலவரையறை எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சும் அரசாங்க தொழில்நுட்ப முகவையும் இணைந்து இந்த மொழிபெயர்ப்புக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளன.

உள்நாட்டுப் பயன்பாட்டுக்கு ஏற்றவகையில் இதற்கு முன்பு செயல்பாட்டில் இருந்த மொழிபெயர்ப்பு அமைப்புகள் இயங்கவில்லை.

பரந்த, பன்மொழிகள் சார்ந்த மாதிரி வடிவமைப்புகளைக் கொண்டு ஒரு வாக்கியம் அல்லது பத்திக்கு உகந்த துல்லியமான தேர்வுகளைத் தற்போதைய மொழிபெயர்ப்பு கட்டமைப்பு உள்ளடக்கியுள்ளது என்று ஐவர் குழுவின் உறுப்பினரான ஹரேஷ் வெங்கடேசன் தெரிவித்தார்.

“அரசாங்கத்தில் பயன்பாட்டில் உள்ள மொழிபெயர்ப்புக்கான தரவுகளின் அடித்தளத்தை முன்வைத்து நாங்கள் தற்போதைய பன்மொழிக் கட்டமைப்பை இணைத்துள்ளோம். எனவே பொதுவான சொற்களைத் தவிர்த்து அதிகாரபூர்வ தொடர்களைக் கட்டமைப்பு பயன்படுத்தும்,” எனவும் அரசாங்கத்தின் ஓஜிபி தொழில்நுட்பப் பிரிவின் பொறியாளரான திரு ஹரிஷ் கருத்துரைத்தார்.

மொழிபெயர்ப்புச் சோதனை அக்டோபர் மாதம் வரையில் நடைபெறும். தகவல் மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சின் இணையத்தளத்தின் ஒவ்வொரு பக்கத்தின் மேல் வலது மூலையில் மொழிபெயர்ப்பு சோதனைக்கான செயற்கருவி இருக்கும்.

அதனை அழுத்தி மக்கள் அவர்களுக்குத் தேவையான மொழியில் தகவல்களைப் படிக்கலாம்.

பொதுமக்கள் கருத்து வரவேற்கப்படுகிறது

மொழிபெயர்ப்புகள் சரியாக அமையவேண்டும் என்ற காரணத்தால் அதன் வடிவமைப்பாளர்களான பாலிகுளாட் குழுவினர், தவறுகள் இருந்தால் அவற்றை தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் மொழிபெயர்ப்புகள் எப்படி அமையவேண்டும் என்பது குறித்த கருத்துகளையும் அவர்கள் பொதுமக்களிடமிருந்து வரவேற்கின்றனர். அதன்வழியாக மொழிபெயர்ப்புகள் தரமாக, மேம்பட்ட வகையில் அவை அமையும் என்று எதிர்பார்க்கின்றனர்.

அமைச்சின் அதிகாரிகள் மொழிபெயர்ப்புகளில் திருத்தம் செய்யும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எனவே இயந்திரங்களை மட்டும் சார்ந்து இருந்துவிடாமல் மனித ஈடுபாடு எப்பொழுதும் இருப்பது திட்டத்தில் உறுதி செய்யப்படும்.

குறிப்புச் சொற்கள்