சிங்கப்பூரில் 35 வயதிற்குட்பட்டவர்கள் வயதில் மூத்த ஊழியர்களைவிடவேலையில் குறைந்த ஈடுபாட்டைக் கொண்டிருப்பதுடன், அன்றாட மன அழுத்தத்திற்கும் அதிகம் ஆளாவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரின் இந்தத் தலைமுறை இடைவெளி, உலக சராசரியைவிட மூன்று மடங்கு அதிகம் என்று திங்கட்கிழை (ஜூன் 22) வெளியிடப்பட்ட முதலாவது ‘சிங்கப்பூர் பணியிட அறிக்கை 2026’ சுட்டுகிறது.
பணியிட ஆலோசனை நிறுவனமான கேலப் (Gallup), சிங்கப்பூர் இயக்குநர்கள் கழகம் ஆகியவை இணைந்து நடத்திய அந்த ஆய்வின்படி, 35 வயதிற்குட்பட்ட ஊழியர்களின் பணி ஈடுபாடு 10 விழுக்காடாக உள்ளது. இது, 35 அதற்கு மேற்பட்ட வயதுடைய ஊழியர்களின் 16 விழுக்காடு ஈடுபாட்டுடன் ஒப்பிட குறைவு.
சிங்கப்பூர் ஊழியர்களில் 14 விழுக்காட்டினர் மட்டுமே அர்ப்பணிப்புடன் வேலை செய்கிறார்கள். இது தென்கிழக்காசியாவின் சராசரியான 25 விழுக்காட்டை விடவும், உலக/g சராசரியான 20 விழுக்காட்டை விடவும் குறைவாகும்.
பணியில் ஈடுபாடற்ற ஊழியர்கள், மற்றவர்களைவிட இரு மடங்கு அதிக மன அழுத்தத்திற்கும், மூன்று மடங்கு அதிக கோபத்திற்கும் ஆளாவதாக அறிக்கை கூறுகிறது.
சிங்கப்பூர் ஊழியர்களிடம் பணி ஈடுபாடு குறைவாக இருந்தாலும், ஒட்டுமொத்தமான நலவாழ்வில் சிங்கப்பூரின் நிலை சிறப்பாக உள்ளதாகச் சிங்கப்பூர்ப் பணியிட அறிக்கை 2026ஐ வெளியிட்டு உரையாற்றிய மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் தெரிவித்தார்.
சிங்கப்பூர் ஊழியர்களில் 40 விழுக்காட்டினர் தங்கள் வாழ்க்கை சிறப்பாக இருப்பதாகக் கூறியுள்ளனர். இது, உலகச் சராசரியான 34 விழுக்காடு, தென்கிழக்காசிய சராசரியான 36 விழுக்காடு ஆகியவற்றைவிட அதிகம்.
நல்ல வேலை என்பது ஊழியர்களை நிறுவனம் நடத்தும் விதம், வேலைகளைச் செய்வதில் அவர்களுக்கிருக்கும் சுதந்திரம், நல்ல பணியிட உறவுகளைப் பொறுத்தது. அதுவே நாட்டின் பொருளியல் வளர்ச்சிக்கும் சமூக ஒற்றுமைக்கும் முக்கியம் என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
உலகளாவிய சந்தை நெருக்கடி, சவாலான பொருளியல் நிலைமைகள், கடுமையான போட்டித்தன்மை போன்றவையே தங்கள் ஈடுபாடின்மைக்குக் காரணம் என ஆய்வில் பங்கேற்வர்கள் கூறினர்.
சிங்கப்பூரில் பணிபுரியும் 1,000 ஊழியர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மூத்த தலைவர்கள் 33 பேரிடம் நேர்காணலும் செய்யப்பட்டது.
குறிப்பாக, ஒரு குழுவின் பணி ஈடுபாட்டிற்கு 70 விழுக்காடு, மேலாளர்களே காரணம் என்று கேலப் நிறுவனத்தின் வட்டார இயக்குநர் கனிகா சிங் கூறினார்.
பல நிறுவனங்கள் மேலாளர்களின் தொழில்நுட்பத் திறன்களுக்கு முதலீடு செய்யும் அளவிற்கு, அவர்களின் மேலாண்மைத் திறனை வளர்க்கத் தவறிவிடுகின்றன.
செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பத்தின் வருகை இளம் ஊழியர்களிடையே வேலை குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அவர்கள் ஏஐ தொழில்நுட்பத்தை ஏற்பதில் சுணக்கம் காட்டுகின்றனர்.
மேலும், தொடக்கநிலைப் பணிகளை ஏஐ செய்வதால், இளையர்கள் தங்களின் அடிப்படைத் திறன்களை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்புகளை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இளம் தலைமுறையினரைத் தொழில்நுட்ப மாற்றங்களுக்குத் தயார்ப்படுத்த நிறுவனங்கள் போதிய முதலீடு செய்ய வேண்டும் என்று துறைசார்ந்த வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

