எஸ்ஜி கலாசாரச் சிறப்புத் தொகைத் திட்டம் தொடங்கியதிலிருந்து அதற்காக ஒதுக்கப்பட்ட $300 மில்லியனில் 10 விழுக்காடு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் சென்ற ஆண்டு செப்டம்பரில் அறிமுகம் கண்டது.
இதுவரை அந்தத் தொகையில் 18 முதல் 35 வயது வரையிலான இளையர்கள் 43 விழுக்காடும் 36 முதல் 54 வயது வரையிலானவர்கள் 38 விழுக்காடும் 55 வயதை எட்டியோர் 19 விழுக்காடும் பயன்படுத்தியுள்ளனர்.
திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டான நிலையில் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு அதுகுறித்து விவரம் தந்தது. ஆகஸ்ட் 30ஆம் தேதி நண்பகல் 12 மணி நிலவரப்படி, $30.4 மில்லியன் மதிப்பிலான கலாசாரச் சிறப்புத் தொகை பயன்படுத்தப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது.
மூத்தோரின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் புதிய இணையவாசல் ஒன்றை அமைச்சு உருவாக்குகிறது. ‘குரூப்-அசிஸ்ட் போர்ட்டல்’ என்று அந்த இணையவாசல் வழங்கப்படுகிறது. அது நவம்பர், டிசம்பர் மாதங்களில் முன்னோட்டம் காணும். துடிப்புடன் மூப்படைதலை ஊக்குவிக்கும் நிலையங்களும் தாதிமை இல்லங்களும் குழுச் சுற்றுலாக்களை ஒருங்கிணைக்க இந்த இணையவாசல் உதவும்.
திட்டத்தைப் பயன்படுத்தும் முறையை இது எளிமையாக்கும். எதிர்காலத்தில் இத்திட்டத்தைப் பயன்படுத்தக்கூடிய நிகழ்ச்சிகளுக்கு விருப்பமுள்ளோரை அழைத்துச் செல்ல விரும்பும் மற்ற அமைப்புகளுக்கும் இணையவாசல் பயனுள்ளதாக இருக்கும்.
பதினெட்டு வயதை எட்டிய மூன்று மில்லியன் சிங்கப்பூரர்கள் இதற்குத் தகுதி பெற்றிருந்தனர். இவர்களில் 411,000 பேர் (14 விழுக்காடு) தங்களின் $100 சிறப்புத் தொகையை முழுமையாகவோ பகுதியளவோ செலவிட்டுள்ளனர்.
சிறப்புத் தொகையில் அதிகம் கலை நிகழ்ச்சிகளுக்கே செலவிடப்பட்டதாக அமைச்சு கூறியது. இருப்பினும், இத்திட்டத்தில் பின்னர் இணைக்கப்பட்ட சிங்கப்பூர் இலக்கியப் புத்தகங்களுக்கு $2.9 மில்லியனும் உள்ளூர்த் திரைப்படங்களுக்கு $1.6 மில்லியனும் செலவிடப்பட்டுள்ளன.


