தம் பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை ஒரே ஒருமுறை மட்டுமே சந்தித்துவிட்டு, அவரைத் திருமணம் செய்துகொள்ள சம்மதித்தார் ஜாக்கியதுன்னிசா ஜியாவுதீன், 26.
மக்கள் தொடர்புத் துறை அதிகாரியான இவருக்கும் விமானத் தொழில்நுட்பரான 31 வயது பஷீர் அகமது முகமது அசாருதீனுக்கும் இடையே இரண்டே வாரங்களில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, 2025 ஆகஸ்ட்டில் நடைபெற்ற இவர்களது திருமணத்திற்கு முன்பாக, இந்தத் தம்பதியர் அதிகபட்சம் ஐந்து முறை மட்டுமே நேரில் சந்தித்தனர்.
சிங்கப்பூரில் வளர்ந்த ஜாக்கியதுன்னிசா, தம் வாழ்க்கைத்துணையைத் தாமே தேடிக்கொள்ளலாம் என்றுதான் முதலில் நினைத்திருந்தார். ஆனால் அது கைகூடவில்லை.
இரண்டு மகள்களில் மூத்தவரான இவர், இதற்கு முன்பு பலமுறை வரன் தேடும் பெற்றோரின் விருப்பத்தை மறுத்து வந்தார். இவரின் தங்கை கல்வி பயின்று வருகிறார்.
தொடர்பியல், சமூகவியலில் பட்டம்பெற்று, ஈராண்டுகள் பணியாற்றிய பிறகு, 2024ல் தம் வாழ்க்கையில் ஒரு நிலைத்தன்மையை எட்டியதாக உணர்ந்தார். அதன் பின்னரே, பெற்றோர் வரன் பார்ப்பதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார்.
இதற்கிடையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த வானூர்திப் பொறியியல் பட்டதாரியான திரு அசாருதீன், 2018ல் வேலைக்காகச் சிங்கப்பூர் வந்திருந்தார்.
அசாருதீனின் சொந்த ஊரிலும் குடும்பத்திலும் இன்றும் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களே வழக்கமாக உள்ளன. அவரின் அண்ணன், தங்கையின் திருமணங்களும் அவ்வாறே நடைபெற்றவை.
தொடர்புடைய செய்திகள்
“எனது பெற்றோருக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். அதனால் வரன் பார்க்கும் முடிவை அவர்களிடமே விட்டுவிட்டேன். பெண்ணின் பண்புநலன்களை ஆராய்ந்து, அவர் எனக்குப் பொருந்திப் போவாரா என்பதை என் பெற்றோர் சரியாகக் கணித்து முடிவெடுப்பர்,” என்று திரு அசாருதீன் பகிர்ந்துகொண்டார்.

