எஸ்ஜி வருகை அட்டையைச் சமர்ப்பிக்க வாகனங்களுக்கு ‘விஇபி’ அவசியம்

எஸ்ஜி வருகை அட்டையைச் சமர்ப்பிக்க வாகனங்களுக்கு ‘விஇபி’ அவசியம்

படம்: எஸ்பிஎச் மீடியா

23 Sep 2026 - 7:35 pm

1 mins read

வெளிநாட்டுப் பதிவெண் கொண்ட கார்களில் சிங்கப்பூருக்குள் நுழைபவர்கள், அந்த வாகனங்களுக்குச் செல்லுபடியாகும் ‘விஇபி’ என்னும் வாகன நுழைவு அனுமதி இருந்தால் மட்டுமே தங்கள் ‘எஸ்ஜி வருகை அட்டை’யை சமர்ப்பிக்க முடியும்.

இந்த நடைமுறை அக்டோபர் 6ஆம் தேதி முதல் நடப்புக்கு வரவிருப்பதாக குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 22) தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.

‘விஇபி’ இல்லாத காரில் சிங்கப்பூருக்குள் நுழைய முயல்வோர் தங்கள் வருகை அட்டையை சமர்ப்பிக்க இயலாது. ஏனெனில் அந்த வருகை அட்டையைக் கண்காணிக்கும் தொழில்நுட்பம் வாகனத்தின் விஇபி நிலையைச் சரிபார்க்கும்.

அதுபோன்ற வேளைகளில், உட்லண்ட்ஸ் அல்லது துவாஸ் நிலவழிச் சோதனைச் சாவடிகள் வழியாக சிங்கப்பூருக்குள் நுழையும் ‘விஇபி’ இல்லாத வாகனங்களை ஓட்டுவோர் அதற்காக விண்ணப்பிக்குமாறு கேட்கக்கொள்ளப்படுவர்.

“இந்த முன்கூட்டிய சரிபார்ப்பு, வாகனம் செல்லுபடியாகும் ‘விஇபி’யைக் கொண்டிருக்கவில்லை என்றால் பயணிகளுக்கும் ஓட்டுநர்களுக்கும் எச்சரிக்கும்.

“இதனால் சிங்கப்பூருக்குப் பயணம் செய்வதற்கு முன்பே அவர்கள் இந்தச் சிக்கலைச் சரிசெய்ய வாய்ப்பு கிடைக்கும். மேலும், நிலவழிச் சோதனைச் சாவடிகளில் இருந்து திருப்பி அனுப்பப்படும் சிரமத்தைத் தவிர்க்கலாம்,” என்று ஆணையம் தெரிவித்தது.

நிலவழிச் சோதனைச் சாவடிகளில் உள்ள பிற வாகனங்களுக்கும் இந்த ‘விஇபி’ தேவை படிப்படியாக விரிவாக்கப்படும் என்றும் அது தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
வாகன நுழைவுசோதனைச் சாவடிவாகனம்