செயற்கை நுண்ணறிவுச் சம்பவங்கள் குறித்து வெளிப்படையாக இருக்கவேண்டும் என்று முன்வைக்கப்பட்ட சிங்கப்பூரின் வேண்டுகோளுக்கு ஓப்பன்ஏஐ நிறுவனம் பதிலளித்துள்ளது.
அத்தகைய சம்பவங்கள் நடந்திருப்பதை உறுதிப்படுத்திய பின் பாதிக்கப்பட்ட அரசாங்க அமைப்புகளிடமும் சம்பந்தப்பட்ட அமைப்புகளிடமும் உடனடியாக அதுகுறித்து தெரிவிக்க நிறுவனம் உறுதியளித்தது.
ஆனால் எவ்வளவு துரிதமாகச் செயற்கை நுண்ணறிவுச் சம்பவங்கள் குறித்து தெரிவிக்கப்படும் என்பது குறித்து அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோவில் தலைமையகத்தைக் கொண்டுள்ள ஓப்பன்ஏஐ நிறுவனம் தெரிவிக்கவில்லை.
செயற்கை நுண்ணறிவுச் சம்பவங்கள் குறித்து அறிந்து அதை உறுதிப்படுத்திய பின் உடனடியாகத் தொடர்புடைய அமைப்புகளைத் தற்போது தொடர்புகொள்கிறோம் என்று ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான தலைமை அதிகாரி கிரிஸ் லெஹேன் குறிப்பிட்டார்.
அதற்கென ஒரு கால வரையறையைச் சிங்கப்பூர் அரசாங்கம் நிர்ணயிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவிருப்பதாக லெஹேன் சொன்னார்.
தகவல் பரிமாற்றம் குறித்தும் எவ்வாறு அதற்கு ஆதரவளிப்பது என்பது குறித்தும் சிங்கப்பூர் அதிகாரிகளுடன் ஓப்பன்ஏஐ அணுக்கமாகச் செயல்படும் என்று அவர் பகிர்ந்துகொண்டார்.
ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் சுகாதாரப் புள்ளிவிவரத் தளத்தை ஓப்பன்ஏஐயின் செயற்கை நுண்ணறிவு மாதிரி ஒன்று ஊடுருவியதன் தொடர்பில் அத்தகைய சம்பவங்கள் குறித்து இன்னும் வெளிப்படையாக இருக்கவேண்டும் என்று சிங்கப்பூர் அண்மையில் அழைப்பு விடுத்தது.
என்ன நடந்தது என்பதை அரசாங்கங்கள் அறிந்துகொள்வதற்கு உதவியாகச் செயற்கை நுண்ணறிவுச் சம்பவங்கள் குறித்த தகவல்களை முக்கிய செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் உடனடியாகப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று சிங்கப்பூரும் பிற நாடுகளும் கேட்டுக்கொள்வதாக உள்துறை அமைச்சரும் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான கா. சண்முகம் அக்டோபர் 13ஆம் தேதி முன்வைத்தார்.
இவ்வாண்டு ஜூன் மாதம் ஓப்பன்ஏஐயின் மென்பொருள் ஒன்று, மருத்துவப் பராமரிப்புப் புள்ளிவிவரங்களை அனுமதியின்றி ஊடுருவியது.
அதுகுறித்த தகவல்கள் தாமதமாக அளிக்கப்பட்டன என்று ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் கூறினார்.
