தெம்பனிசில் அனைவரும் பயன்படுத்தக்கூடிய விளையாட்டுத் திடல் திறப்பு

சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவோருக்கான சறுக்குப்பலகையைக் கொண்ட முதல் பூங்கா

தெம்பனிசில் அனைவரும் பயன்படுத்தக்கூடிய விளையாட்டுத் திடல் திறப்பு

2 mins read
6702cf1a-91ee-4621-a20b-d4435f3dfe09
தெம்பனிஸ் அவென்யூ 7ல் உள்ள சன் பிளாசா பூங்காவில் அமைந்திருக்கும் விளையாட்டுத் திடலில் சக்கர நாற்காலியில் செல்வோர் பயன்படுத்தக்கூடிய சறுக்குப்பலகையும் நிறுவப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் அனைவரையும் அரவணைக்கும் புதிய விளையாட்டுத் திடல் தெம்பனிசில் புதன்கிழமை (ஜூன் 17) அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளது.

தெம்பனிஸ் அவென்யூ 7ல் உள்ள சன் பிளாசா பூங்காவில் அது அமைந்துள்ளது. சக்கர நாற்காலியில் செல்வோர் பயன்படுத்தக்கூடிய சறுக்குப்பலகையும் அங்கு நிறுவப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் அத்தகைய சறுக்குப் பலகை அமைக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை.

சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவோர் உட்பட அனைவருக்கும் ஏற்ற வகையில் பூங்காவில் ஊஞ்சல்கள், சறுக்குப்பலகைகள் எனப் பல்வேறு வசதிகள் உள்ளன.

திடலில் இருக்கும் கருவிகளிலும் தளங்களிலும் பார்வைக் குறைபாடு உள்ளோர் எளிதில் காணும் வகையில் வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

விளையாட்டுத் திடலில் நான்கு பகுதிகள் உள்ளன. ஒவ்வொன்றும் விதைகளைத் தூவும் விதங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இயற்கைச் சூழலைப் பற்றிப் பிள்ளைகள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதும் அதனுடன் தொடர்பில் இருப்பதை ஊக்குவிப்பதும் நோக்கம்.

தேசியப் பூங்காக் கழகமும் மேஜிக்கல் பிரிட்ஜ் அறநிறுவனமும் இணைந்து விளையாட்டுத் திடலை அமைத்துள்ளன. கலிபோர்னியாவைத் தளமாகக் கொண்ட அந்த அறநிறுவனம், அனைவருக்கும் உகந்த விளையாட்டுத் திடல்களை வடிவமைப்பதில் பெயர்பெற்றது.

தெம்பனிசில் உள்ள புதிய விளையாட்டுத் திடலின் பரப்பளவு 3,800 சதுரமீட்டர். அது, காற்பந்துத் திடலின் அளவில் பாதிக்கும் சற்று அதிகம். விளையாட்டுத் திடலில் பாதுகாப்பு வேலி போடப்பட்டுள்ளது. பிள்ளைகள் விளையாடும்போது அவர்களைக் கவனித்துக்கொள்வோருக்கு அது மனநிம்மதியைத் தரும் என்று நம்பப்படுகிறது.

மேஜிக்கல் பிரிட்ஜ் அறநிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அமெண்டாவும் வின்ஸ் ஸ்டெக்லரும் பூங்கா நகர நிதிக்கு அளித்த $3.9 மில்லியன் நன்கொடையைக் கொண்டு விளையாட்டுத் திடல் உருவாக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத் திடலின் தொடக்க நிகழ்ச்சியில் தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் சுன் ‌ஷுவெலிங் கலந்துகொண்டார்.

“சிங்கப்பூரின் மிக முழுமையான, அனைவரையும் உள்ளடக்கிய, எளிதில் அணுகக்கூடிய விளையாட்டுத் திடல்களில் ஒன்று இப்போது சன் பிளாசா பூங்காவில் அமைந்திருப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது,” என்றார் அவர்.

உடல் ரீதியாக அனைவராலும் அணுகக்கூடிய வசதிக்கு அப்பால், இந்த விளையாட்டுத் திடல் பல்வேறு உணர்வுகளையும் வளர்ச்சித் தேவைகளையும் நிறைவேற்ற உதவியாக இருக்கும் என்று அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்
தெம்பனிஸ்பூங்காவிளையாட்டுதிடல்சக்கர நாற்காலி