சிங்கப்பூரில் மூத்தோருக்கான முதல் தனியார் வீடமைப்புத் திட்டம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 18) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பெரெனியல் லிவிங் என்று அழைக்கப்படும் அந்தக் குடியிருப்பு வளாகம் மருத்துவ வசதிகளையும் பல்வேறு சொகுசு அம்சங்களையும் கொண்டுள்ளது.
28 பெர்ரி அவென்யூவில், கிட்டத்தட்ட 195,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள பெரெனியல் லிவிங் குடியிருப்பு $260 மில்லியன் செலவில் கட்டப்பட்டுள்ளது.
அங்குப் பெரெனியல் ஆரோக்கிய மையம், பாரம்பரிய சீன மருத்துவச் சேவைகள், ஐந்து நட்சத்திர உபசரிப்பு, உணவகம் போன்றவை அமைந்துள்ளன.
பெரெனியல் லிவிங் வளாகம், வசதியுடன் கூடிய 200 அடுக்குமாடிக் குடியிருப்புகளைத் தற்போதைக்குக் கொண்டுள்ளது.
330 சதுர அடியில் உள்ள ஸ்டூடியோ வீடுகளுக்கான மாதாந்தர வாடகை $8,000. ஈரறை கொண்ட 565 சதுர அடி வீட்டின் மாதாந்தர வாடகை $13,000லிருந்து தொடங்குகிறது.
ஒவ்வொரு வீட்டிலும் உயரமான கூரை, கூரையிலிருந்து தரை வரை நீளமுள்ள சன்னல், சிறிய சமையலறை, தனியார் மின்தூக்கி வசதி ஆகிய வசதிகள் உள்ளன.
வீடுகளில் உள்ள திரைச்சீலைகள், மின்விளக்குகள் போன்றவற்றை தொலைவியக்கி மூலம் கட்டுப்படுத்திக்கொள்ளலாம்.
பெரெனியல் லிவிங்கின் இரண்டாம் கட்டத்தில் 100 படுக்கை வசதி கொண்ட தாதிமை இல்லம் செயல்படும். இவ்வாண்டின் நான்காம் காலாண்டிலிருந்து அதன் செயல்பாடுகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அங்கு அடிப்படை தாதிமை வசதிகள் கொண்ட பராமரிப்புச் செலவு மாதம் $7,600லிருந்து தொடங்குகிறது.
குடியிருப்பாளர்கள் குறைந்தது 65 வயதில் இருப்பதுடன் குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் வசதியுடன் கூடிய வீடுகளில் தங்கவேண்டும். மாறாக, தாதிமை இல்லத்தில் தங்குவதற்கு காலவரையறை இல்லை.
சிங்கப்பூரின் மக்கள்தொகை மூப்படைவதால் மூத்தோர் எப்படி வாழவேண்டும் என்பதை மறுவடிவமைப்பதற்கான வாய்ப்பிருப்பதாக நம்புகிறோம் என்றார் பெரெனியல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவரும் தலைமை நிர்வாகியுமான புவா செக் குவான்.
“பராமரிப்புக்கும் அப்பால் உள்ள அனுபவத்தைத் தரவேண்டும் என்பதுதான் பெரெனியல் லிவிங் வளாகத்தின் நோக்கம். ஒருங்கிணைந்த மருத்துவப் பராமரிப்பு, கரிசனையுள்ள உபசரிப்பு, அர்த்தமுள்ள வாழ்க்கைமுறை அனுபவங்கள் ஆகியவற்றுடன் துடிப்புமிக்க சமூகத்தில் மூத்தோர் தன்னிச்சையாக வாழவேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு இதை உருவாக்கினோம்,” என்றார் திரு புவா.
அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் பெரெனியல் லிவிங் குடியிருப்பில் கிட்டத்தட்ட 30 விழுக்காடுவரை நிரப்பப்படும் என்று எதிர்பார்ப்பதாகத் திரு புவா குறிப்பிட்டார்.


