மனிதவள அமைச்சிற்குச் சொந்தமான புதிய ஊழியர் தங்குவிடுதி திறப்பு

2 mins read
26fba2b2-a9fd-4833-b7ad-44f3730201c4
எதிர்காலத்தில் தொற்றுப் பரவலைத் தடுத்து, சமூக ஒன்றுகூடலை ஊக்குவிக்கும் வகையில் மனிதவள அமைச்சின் புதிய தங்குவிடுதி வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: த.கவி

வெளிநாட்டு ஊழியர்கள் 2,400 பேர் தங்கும் வகையில், 210 அறைகளுடன் கூடிய மனிதவள அமைச்சிற்குச் சொந்தமான தங்குவிடுதி அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது. மனிதவள அமைச்சின் நோக்கத்திற்கு ஏற்ப பிரத்யேகமாக வடிவமைத்துக் கட்டப்பட்ட முதல் தங்குவிடுதி இதுவாகும்.

துக்காங்கில் (Tukang) அமைந்துள்ள இந்தத் தங்குவிடுதியை ஜனவரி 17-ஆம் தேதியன்று மனிதவள அமைச்சர் டாக்டர் டான் சீ லெங் திறந்து வைத்தார். மனிதவள அமைச்சின் ‘ஏஸ்’ (ACE) குழுமத் தலைவர் தினேஷ் வாசு தாஸ், மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ஷான் ஹுவாங் ஆகியோரும் இந்த அதிகாரபூர்வத் திறப்பு விழாவிற்கு வருகை தந்தனர்.

விழாவில் பேசிய அமைச்சர் டான், “தொடக்கத்தில் அடிப்படை தங்குமிட வசதியை மையமாகக் கொண்டு இயங்கினாலும், கொவிட்-19 பெருந்தொற்றுக் காலம் தங்குவிடுதிக் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது,” என்றார். 

புதிய தங்குவிடுதி திறப்பு விழாவில் மனிதவள அமைச்சர் டான் சீ லெங்குடன் மனிதவள அமைச்சின் ‘ஏஸ்’ (ACE) குழுமத் தலைவர் தினேஷ் வாசு தாஸ், மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ஷான் ஹுவாங் ஆகியோர் வருகை அளித்தனர்.
புதிய தங்குவிடுதி திறப்பு விழாவில் மனிதவள அமைச்சர் டான் சீ லெங்குடன் மனிதவள அமைச்சின் ‘ஏஸ்’ (ACE) குழுமத் தலைவர் தினேஷ் வாசு தாஸ், மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ஷான் ஹுவாங் ஆகியோர் வருகை அளித்தனர். - படம்: த.கவி

அன்று முதல், அரசாங்கம் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பங்குதாரர்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாகக் கூறிய டாக்டர் டான், ஊழியர்களின் உடல் மற்றும் மன நலனைக் கருத்தில் கொண்டு இந்தப் புதிய விடுதி வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் தொற்றுப் பரவலைத் தடுத்து, சமூக ஒன்றுகூடலை ஊக்குவிக்கும் வகையில் இந்த வளாகம் வடிவமைக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். லிஷா உள்ளிட்ட பங்குதாரர்களுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளையும் உள்ளடக்கி, இதனை ‘வீட்டைத் தாண்டிய மற்றொரு வீடு’ எனும் நோக்கில் வடிவமைத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

“வாடகையை அதிகம் உயர்த்தாமல், அதே சமயம் சிறந்த வசதிகளை ஏற்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கம். அனைவருக்கும் தரமான தங்குமிட வசதி சாத்தியம் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது,” என்றார் டாக்டர் டான்.

இதனைத் தொடர்ந்து, இந்த விடுதியைக் காட்டிலும் மூன்று மடங்கு பெரிய விடுதி ஒன்றை மனிதவள அமைச்சு செங்காங் வெஸ்ட் வட்டாரத்தில் திறக்கும் என்று கூறிய டாக்டர் டான், அதற்கான கட்டுமானப்பணிகள் தொடங்கியுள்ளதையும் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு ஊழியர்கள் வாழ ஏற்ற இடங்களாக தங்குவிடுதிகளின் தரத்தை உயர்த்த 2021ல் விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டதை டாக்டர் டான் சுட்டினார். 
வெளிநாட்டு ஊழியர்கள் வாழ ஏற்ற இடங்களாக தங்குவிடுதிகளின் தரத்தை உயர்த்த 2021ல் விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டதை டாக்டர் டான் சுட்டினார்.  - படம்: த.கவி

தங்குவிடுதி நிலைமாற்றத் திட்ட மானியம் அறிவிப்பு

தங்குவிடுதி நிலைமாற்றத் திட்டத்தின் (Dormitory Transition Scheme) கீழ் தேர்ந்தெடுக்கப்படும் தங்குவிடுதிகளுக்கு, மறுசீரமைப்புப் பணிகளுக்காக மானியம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.

தேர்ந்தெடுக்கப்படும் விடுதிகள், ஒரு பிரிவுக்கு 3,000 முதல் 8,800 வெள்ளி வரை மானியம் பெறும். ஏறத்தாழ 200,000 படுக்கைகளைக் கொண்ட 900 விடுதிகள் இம்மானியங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்