விளையாட்டு, பொழுதுபோக்கு, சமூகக் கூடலுக்கான புதிய பல அடுக்கு விளையாட்டு வளாகம் ஜாலான் காயுவில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) திறக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய தனியார் பலமாடி விளையாட்டு வளாகமான ‘தி ஸ்போர்ட்ஸ் அரினா’ (டிஎஸ்ஏ@ஜாலான் காயு) பேட்மிண்டன், காற்பந்து, நீச்சல், சீருடற்பயிற்சி (ஜிம்னாஸ்டிக்ஸ்), மேசைப்பந்து, பிகில்பால் போன்ற பல்வேறு விளையாட்டுகளுக்கான வசதிகளைக் கொண்டுள்ளது.
பள்ளிக்கு பிந்தைய குழந்தை பராமரிப்பு மையம் ஒன்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு பங்குதாரர்களின் கூட்டு முயற்சியால் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது என்று வளாகத்தை திறந்துவைத்துப் பேசிய ஜாலான் காயு அடிமட்ட அமைப்புகளின் ஆலோசகரான இங் சீ மெங் தெரிவித்தார்.
வடகிழக்கு பகுதியில் வசிப்போர், தங்கள் வீடுகளுக்கு அருகில் விளையாட்டு, குடும்ப பொழுதுபோக்குக்கான வசதிகள் தேவை என்று தம்மிடம் விடுத்த கோரிக்கையின் பலனாக இது அமைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
“விளையாட்டு மக்களை ஒன்றிணைக்கும் ஆற்றல் கொண்டது. குடும்பங்கள், நண்பர்கள், அண்டைவீட்டாரை ஒன்றிணைக்கும் துடிப்பான சமூக இடமாக வளாகம் உருவாகும்,” என்று திரு இங் சீ மெங் நம்பிக்கை தெரிவித்தார்.
வளாகம் செயல்படத் தொடங்கியதிலிருந்து, இதுவரை ஏறத்தாழ 1,000 பேர் சிறப்புக் கழிவு, முன்னுரிமை முன்பதிவு போன்ற சலுகைகளைப் பெற பதிவு செய்துள்ளனர். இது இப்பகுதியில் விளையாட்டு வசதிகளுக்கான தேவையை உணர்த்துகிறது என்று டிஎஸ்ஏ அமைப்பின் உரிமையாளர் திரு ரிச்சர்ட் டான் தெரிவித்தார்.
குடும்பங்கள், இளைஞர்கள், முதியோர், பொழுதுபோக்கிற்காக விளையாடுவோர், வளரும் விளையாட்டு வீரர்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ‘தி ஸ்போர்ட்ஸ் அரினா’ வளாகம், ‘வாழ்நாள் விளையாட்டு’ என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

