தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொங்கோல் மரபுடைமைப் பாதை திறப்பு

3 mins read
42e4ac94-5168-4568-87b3-17fda60aef10
பொங்கோல் மரபுடைமைப் பாதை திறப்பையொட்டி நடைபெற்ற மரம் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பேராளர்கள், பொதுமக்கள். - படம்: லாவண்யா வீரராகவன்

தேசியப் பூங்காக் கழகத்தின் 400 மீட்டர் நீளமுள்ள பொங்கோல் மரபுடைமைப் பாதை சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) திறக்கப்பட்டது.

பொங்கோல் நார்த் அவென்யூவிலிருந்து கேம்பஸ் பொலிவார்ட் வரை நீளும் இப்பாதை, 2018ஆம் ஆண்டு பொங்கோல் மின்னிலக்க வட்டாரப் பெருந்திட்டத்தின்கீழ் அறிவிக்கப்பட்ட 1.3 கிலோமீட்டர் மரபுடைமைப் பாதையின் ஓர் அங்கமாகும்.

பொங்கோல் ரோடாக இருந்த இச்சாலை, அதன் பண்புகள் மாறாமல், அதேவேளையில் பாதசாரிகள், சிங்கப்பூர்த் தொழில்நுட்பக் கழக மாணவர்கள், குடியிருப்பாளர்கள் என அனைவரும் பயன்படுத்தும் வகையில் மரபுடைமைப் பாதையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

பொங்கோல் மரபுடைமைப் பாதையில் பொதுமக்களுடன் நடந்து செல்லும் பொங்கோல் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
பொங்கோல் மரபுடைமைப் பாதையில் பொதுமக்களுடன் நடந்து செல்லும் பொங்கோல் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள். - படம்: லாவண்யா வீரராகவன்

இதன் அதிகாரபூர்வ திறப்பு நிகழ்ச்சியில் பொங்கோல் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களான துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங், கல்வி, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி, தேசிய வளர்ச்சி மற்றும் போக்குவரத்து மூத்த துணையமைச்சர் சுன் ஷூவெலிங், யோ வான் லிங் ஆகியோர் பங்கேற்று பொதுமக்களுடன் இணைந்து மரக்கன்றுகள் நட்டனர்.

இப்பாதையின் திறப்பைக் குறிக்கும் வண்ணம், அருகிவரும் சிலவகை மரக்கன்றுகள் உட்பட 60 மரக்கன்றுகள் நடப்பட்டன.

“இப்பாதையில் உள்ள, பல ஆண்டுகளாகச் செழித்து வளரும் மரங்கள் உட்பட அனைத்தும் நம் வரலாற்றையும் பாரம்பரியத்தையும் நினைவுபடுத்துகின்றன. இவ்விழாவின் முடிவில் நாம் நட்ட மரங்கள் எதிர்காலத்தைக் குறிக்கின்றன. மரம் நட்டோர், குறிப்பாக சிறுவர்கள் தொடர்ந்து இங்கு வந்து அவர்கள் நட்ட மரம் வளர்வதைக் காண வேண்டும் என ஊக்குவிக்கிறேன்.

“உங்களுடன் மரமும் நாம் இணைந்து வாழும் சிங்கப்பூரும் செழித்துத் தழைக்கும்,” என்றார் திரு கான்.

பொங்கோல் மரபுடைமைப் பாதை.
பொங்கோல் மரபுடைமைப் பாதை. - படம்: லாவண்யா வீரராகவன்

“இப்பாதை பழைய பொங்கோல் வட்டார நினைவுகளைத் தக்கவைத்துள்ளதுடன், குடியிருப்புகள், பல்கலைக்கழகம், அலுவலகங்களைக் கொண்ட பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தின் பசுமைப் பகுதியாகத் திகழ்கிறது. இயற்கையில் ஒரு நகரமாக சிங்கப்பூரை மாற்ற இதுபோன்ற மேலும் பல பசுமை இடங்களை அமைப்போம்,” என்று திருவாட்டி சுன் ஷூவெலிங் கூறினார்.

“சிங்கப்பூர்த் தொழில்நுட்பக் கழக மாணவர்களும் ஆசிரியர்களும் இயற்கையுடனும் குடியிருப்பாளர்களுடனும் இணைந்திருக்க சிறந்த வாய்ப்பாக இப்பாதை அமைந்துள்ளது.

“எளிதாக உபயோகிக்கும் வண்ணம் எங்கள் வளாகத்தின் நீட்சிபோல இப்பாதை அமைந்துள்ளது மகிழ்ச்சி,” என்றார் சிங்கப்பூர்த் தொழில்நுட்பக் கழகத் தலைவர் சுவா கீ சைங்.

இப்பகுதியின் வரலாறு குறித்து அறியும் வகையிலான தகவல் பலகைகளுடன் மாணவர்களும் பொதுமக்களும் பயன்படுத்தும் வகையில் ஒன்றுகூடல் இடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இச்சாலையில் இருந்த பேருந்து நிறுத்தம், பொங்கோல் வரைபடம் வரலாற்றுத் தகவல்களுடன் அமருமிடமாக மறுபயன்பாடு கண்டுள்ளது.

இப்பாதையில் ‘பிக் அப் ஸ்டிக்ஸ்’ எனும் சிறுவயது விளையாட்டின் கருப்பொருளில் அமைந்த விளையாட்டு இடமும் பரமபத விளையாட்டை மையமாகக் கொண்ட 70 மீட்டர் பாதையும் அமையவுள்ளன. இவற்றை ஆண்டிறுதியில் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

பொங்கோல் பாயிண்ட் பூங்கா, பொங்கோல் படகுத்துறை வரை நீளும் 1.3 கி.மீ. முழுப்பாதையின் பணிகள் 2026 இறுதியில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற மரம் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற குடியிருப்பாளர் சிமி பரதன், 33 இப்பாதையில் நடப்பது புத்துணர்வு அளிப்பதாகச் சொன்னார்.

தமது இரு பிள்ளைகளுடன் பங்கேற்ற குடியிருப்பாளர் நஸ்ரின், 32, “பிள்ளைகளை இயற்கையுடனும் சமூகத்துடனும் இணைக்கும் வகையில் இப்பாதை அமைந்துள்ளது,” என்றார்.

மரம் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சியளிப்பதாக இருவரும் கூறினர்.

குறிப்புச் சொற்கள்