சிறுமி மேகன் குங், 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் தனது தாயார் ஃபூ லி பிங், அவரது அப்போதைய காதலர் வோங் ஷி சியாங் இருவராலும் கொடுமைப்படுத்தப்பட்டு உயிரிழந்தார்.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய அமைப்புகளின் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையைச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு நியமித்த தன்னிச்சையான மறுஆய்வுக் குழு வியாழக்கிழமை (அக்டோபர் 23) வெளியிட்டது.
அதில், அமைச்சின் குழந்தைப் பாதுகாப்புச் சேவை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நடவடிக்கைகளில் காணப்பட்ட குறைபாடுகள் சிறுமி உயிரிழந்த துயரச் சம்பவத்துக்கு இட்டுச் சென்றதாகக் கூறப்பட்டுள்ளது.
2017லிலிருந்து பாலர் பள்ளியில் பயின்ற மேகன், 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 18 முதல் ஒரு மாதத்துக்குப் பள்ளி செல்லவில்லை. சிறுமியின் தாய்வழிப் பாட்டி அவரைப் பார்த்துக்கொண்டார்.
ஒரு மாதம் கழித்துப் பள்ளி சென்ற மேகனின் உடலில் காயங்கள் காணப்பட்டன. சைக்கிள் விபத்தும் ஒழுங்கு நடவடிக்கையும் காரணம் என்றார் தாயார் ஃபூ. அதனால் சிறுமி இரவில் பாட்டியுடன் தங்குவதற்கு பிஎஸ்எஸ் அமைப்பு ஏற்பாடு செய்தது. பின்னர் ஏப்ரல் 5ஆம் தேதி குழந்தைப் பருவ மேம்பாட்டு அமைப்புக்குப் பள்ளி முதல்வர் தகவல் அளித்தார். அதில் பிள்ளையின் காயங்கள் குறித்தும் தாயார் ஃபூ, அவரது காதலர் வோங்கின் போதைப்பொருள் புழக்கம் குறித்தும் விரிவான தகவல்கள் இல்லை.
2019 செப்டம்பர் 5ஆம் தேதிக்குப் பிறகு மேகன் பாலர் பள்ளிக்குச் செல்லவில்லை. சிறுமிக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறிய பாட்டி, அவள் தாயாருடன் தங்கியிருப்பதாகப் பள்ளியிடம் தெரிவித்தார். சிறுமியைத் தாயார் பள்ளியிலிருந்து விலக்கிக்கொள்வதாகக் கூறவே, பள்ளி நிர்வாகம் அமைச்சின் குழந்தைப் பாதுகாப்புச் சேவையைத் தொடர்பு கொண்டது.
சிறுமி வேறு பாலர் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளாரா என்று அமைப்பிடம் விசாரித்த பிஎஸ்எஸ், காவல்துறை அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பி ஆலோசனை கேட்டது. சிறுமியின் பாட்டி காவல்துறையிடம் புகாரளிக்கும் ஆலோசனையை மறுத்துவிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
இடைப்பட்ட காலத்தில் தாயாரும் அவரது காதலரும் சிறுமியைத் தொடர்ந்து துன்புறுத்தினர். 2020 ஜனவரியில் பாட்டி காவல்துறையிடம் புகாரளித்தார். ஆனால், அது குழந்தைத் துன்புறுத்தல் சம்பவமாகக் கருதப்படவில்லை.
இடையில் ஃபூவும் அவரது காதலரும் சிறுமியைப் பட்டினி போட்டதுடன் பல்வேறு வகைகளில் காயப்படுத்தினர். 2020 பிப்ரவரி 22ஆம் தேதி வோங் வயிற்றில் ஓங்கிக் குத்தியதில் சிறுமி உயிரிழந்தார். மே 8ஆம் தேதி சிறுமியின் உடலை பாயா உபி தொழிலியல் பூங்காவில் ஃபூ, வோங், அவர்களின் நண்பர் சுவா மூவரும் உலோகப் பீப்பாயில் இட்டு எரித்தனர். சிறுமியின் உடல் பின்னரும் கண்டெடுக்கப்படவில்லை.
2020 ஜூலையில் மேகனின் தந்தையும் தந்தைவழிப் பாட்டியும் காவல்துறையிடம் தனித்தனியே புகாரளித்தனர். அந்த ஆண்டு ஜூலை 23ஆம் தேதி ஃபூவும் வோங்கும் கைது செய்யப்பட்டனர்.
மறுஆய்வுக் குழுவின் கண்டுபிடிப்புகளில் ஐந்து முக்கிய அம்சங்கள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
முதலாவது, மேகனின் தாய்வழிப் பாட்டி காவல்துறையிடம் புகாரளித்தபோது விசாரணை அதிகாரி இது குறைவான பாதுகாப்புக் கவலைகள் கொண்ட விவகாரம் என்று முடிவெடுத்தார். இரண்டு வாரங்கள் ஃபூவையும் மேகனையும் தேட முயன்ற அதிகாரி பின்னர் அதைக் கைவிட்டுவிட்டார். அவர் மேலதிகாரியிடம் இந்த விவகாரத்தைத் தெரிவித்திருந்தால் சிறுமியைக் கண்டுபிடித்திருக்கும் வாய்ப்பு அதிகம் என்று கருதப்படுகிறது.
இரண்டாவது, அமைச்சின் குழந்தைப் பாதுகாப்புச் சேவை ஊழியர் பாலர் பள்ளியின் தொலைபேசி அழைப்புகளை முறையாகப் பதிவு செய்யவில்லை. அதுகுறித்துத் தனது மேலதிகாரியுடன் கலந்தாலோசிக்கவில்லை.
மூன்றாவது, குழந்தைப் பருவ மேம்பாட்டு அமைப்புக்குப் பள்ளி முதல்வர் மிகவும் தாமதமாகத் தகவல் அளித்தார். அதில் பிள்ளையின் காயங்கள் குறித்தும் தாயார் ஃபூ, அவரது காதலர் வோங்கின் போதைப்பொருள் புழக்கம் குறித்தும் விரிவான தகவல்கள் இல்லை.
நான்காவது, பிள்ளைப் பாதுகாப்பு நிபுணத்துவ நிலையம் பாலர் பள்ளியின் தகவலை அடிப்படையாகக் கொண்டு மேகனின் விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ளவில்லை.
ஐந்தாவது, காவல்துறையிடம் புகாரளிக்க மேகனின் பாட்டி முதலில் தயக்கம் காட்டியது. சிறுமி உயிரிழக்க ஒரு மாதம் முன்புதான் அவர் புகாரளித்தார்.
இவற்றில் ஏதாவதொரு வாய்ப்பு முறையாகப் பயன்படுத்தப்பட்டிருந்தால் சிறுமி விவகாரம் மேம்பட்ட முறையில் கையாளப்பட்டிருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

