குதிரைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வாய்ப்பு

குதிரைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வாய்ப்பு

2 mins read
16092b86-4181-42d8-9a31-7dcf6bdf8c30
‘மோலி’ என்றழைக்கப்படும் 19 வயதுக் குதிரை மீது ஏறி மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட 5 வயது ஸேலின் டிங். புக்கிட் தீமா குதிரைச் சவாரி மன்றத்தின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான குமாரி பவித்ரா மாயாவும் (இடது) உடனிருந்தார். அவரது மேற்பார்வையின்கீழ் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சீனப் பஞ்சாங்கப்படி இவ்வாண்டு குதிரை ஆண்டாகும்.

இதைக் கொண்டாடும் வகையில், புக்கிட் தீமா குதிரைச் சவாரித் தளம் தனது கிராஞ்சி வளாகத்தில் குதிரைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது. இந்தப் பண்டிகைக் காலத்தை அங்குள்ள குதிரைகளுடன் இணைந்து கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பசுமையான சூழல் மற்றும் பழைமையான குதிரை லாயங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த மன்றத்தின் அழகான தளம், வழக்கமான ஸ்டூடியோ புகைப்படங்களுக்கு மாற்றாக, ஒரு தனித்துவமான சீனப் புத்தாண்டுப் பின்னணியைத் தேடும் குடும்பங்களுக்கு ஏற்ற இடமாக மாறியுள்ளது.

முதல் ஒரு மணி நேரத்திற்கு $280லிருந்து கட்டணம் தொடங்குகிறது. இதில் ஒரு குதிரையை வாடகைக்கு எடுப்பது, புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கான நேர ஒதுக்கீடு, குதிரையைப் பராமரிக்க உதவியாளரின் சேவை ஆகியவை அடங்கும்.

அடுத்தடுத்த ஒவ்வொரு மணி நேரத்திற்கும் தலா $100 வசூலிக்கப்படும்.

புகைப்படக் கலைஞர் சேவை கிடையாது. வாடிக்கையாளர்கள் தங்களது சொந்தப் புகைப்படக் கலைஞர்களை அழைத்து வரலாம்.

இந்த ஆண்டின் ராசி விலங்கைக் கௌரவிக்கும் வகையிலும் குதிரைச் சவாரித் தளத்தைப் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையிலும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகப் புக்கிட் தீமா குதிரைச் சவாரி மன்றத்தின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான குமாரி பவித்ரா மாயா தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சிங்கப்பூர் டர்ஃப் கிளப்பில் நடந்த கடைசிப் பந்தயத்திற்குப் பிறகு, சிங்கப்பூரில் இனி குதிரைகளே இல்லை என்ற தவறான புரிதல் மக்களிடையே உள்ளது என்றும் எங்களைப் போன்ற குதிரைச் சவாரித் தளங்கள் இன்னும் உள்ளன என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

விலங்கு நலத்திற்கு இங்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதற்கான ஒவ்வொரு நேர ஒதுக்கீட்டிலும் உதவியாளர் ஒருவர் இருப்பார். மேலும், குதிரையின் அசைவுகளைக் கண்காணிக்கவும் பாதுகாப்பை உறுதிசெய்யவும் குமாரி பவித்ரா நேர ஒதுக்கீடு முழுவதும் உடனிருப்பார்.

குதிரைகளுக்குச் சோர்வு ஏற்படாமல் இருக்க ஒவ்வொரு நேர ஒதுக்கீட்டுக்கு இடையே போதுமான இடைவெளி விடப்படுகிறது. மேலும் மிகவும் அமைதியான குதிரைகள் மட்டுமே இதற்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

இந்தப் புகைப்பட நேர ஒதுக்கீடுகள் ஆண்டு முழுவதும் வழங்கப்படும். முன்பதிவு மற்றும் கூடுதல் விவரங்களுக்கு events@btsc.org.sg என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் மன்றத்துடன் தொடர்புகொள்ளலாம். இது தவிர, இந்தப் பயிற்சி மையம் பொதுமக்களுக்குக் குதிரைச் சவாரிப் பயிற்சிகளையும் வழங்குகிறது.

குறிப்புச் சொற்கள்