எதிர்க்கட்சித் தலைவர் பதவி: பிரதமரின் அழைப்பைப் பாட்டாளிக் கட்சி நிராகரித்தது

3 mins read
2d637e16-4cf1-497f-ade7-8523c67fdc7a
நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தின் நுழைவாயில். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு வேறொருவரைத் தேர்ந்து எடுக்குமாறு பிரதமர் லாரன்ஸ் வோங் கடிதம் வாயிலாக விடுத்த வேண்டுகோளை ஏற்க இயலவில்லை என்று பாட்டாளிக் கட்சி தெரிவித்துள்ளது.

அது தொடர்பாக பாட்டாளிக் கட்சியின் மத்திய செயற்குழு, பிரதமர் வோங்கிற்குக் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது.

அந்தக் கடிதத்தில், “எங்களது தலைமைத்துவத்தைத் தேர்ந்து எடுக்க நாங்கள் உருவாக்கிய நடைமுறைகள் காரணமாக, எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு பாட்டாளிக் கட்சியைச் சேர்ந்த மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரை நியமிக்குமாறு நீங்கள் விடுத்த அழைப்பை எங்களால் ஏற்க இயலவில்லை,” என்று குறிப்பிட்டு உள்ளது.

அந்தக் கடிதம் தவிர, ஊடக அறிக்கை ஒன்றை பாட்டாளிக் கட்சி தனது இணையத்தளத்திலும் சமூக ஊடகத்தளங்களிலும் வெளியிட்டுள்ளது.

“சிங்கப்பூரில் பிரதமர் பதவி என்பது பிரதமரின் விருப்புரிமையின் பேரில் செய்யப்படும் நியமனம். சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு அரசியலமைப்பில் எந்த ஓர் அளவுகோலும் நிர்ணயிக்கப்படவில்லை என்றபோதும் நாடாளுமன்றத்தில் பெரிய கட்சியாக உள்ள பாட்டாளிக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.யே எதிர்க்கட்சித் தலைவராக முடியும் என்ற கருத்தைக் கொண்டுள்ளோம்.

“எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் வழக்கமாக நாடாளுமன்றத்தின் ஆகப்பெரிய எதிர்க்கட்சிக்கு வழங்கப்படுகிறது. அல்லது கேள்விக்குரிய எதிர்க்கட்சியால் தீர்மானிக்கப்படுகிறது.

“எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்படுத்துவது என்பது நமது அரசியல் வளர்ச்சியில் ஒரு முன்னேற்றப் படி ஆகும். அந்தப் பதவிக்கான அங்கீகாரம் 2020ஆம் ஆண்டு மசெக அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்டது.

“அரசியலில் பன்முகத்தன்மை கொண்ட கருத்துகள் அதிகமாக இடம்பெற வேண்டும் என்ற வலுவான விருப்பத்தை சிங்கப்பூரர்கள் வெளிப்படுத்தியதால் அந்த அறிமுகம் நிகழ்ந்தது.

“அதன் அடிப்படையில், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரின் நியமனம் என்பது வாக்குப்பெட்டியில் எதிர்க்கட்சிக்குக் கிடைத்த அரசியல் வெற்றியின் விளைவாக நிகழ்ந்தது என்பதை வலியுறுத்திக் கூறுவது முக்கியம்.

“நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இருக்கவேண்டும் என்பதை மக்களின் வாக்குகளே தீர்மானிக்கின்றன,” என்று பாட்டாளிக் கட்சி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவி சட்டத்தால் நிறுவப்படுகிறது என்றும் “ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்திற்கோ அல்லது பிரதமருக்கோ உரிய தனிச்சிறப்பு அல்லது தேர்வு அல்ல” என்றும் கூறும் வெஸ்ட்மின்ஸ்டர் நாடாளுமன்ற முறையை பாட்டாளிக் கட்சி மேற்கோள் காட்டியுள்ளது.

இந்த அணுகுமுறை மக்கள் அளிக்கும் வாக்கின் அதிகாரத்தையும் புனிதத்தையும் வெளிப்படுத்துகிறது என்று அது கூறியது.

“சிங்கப்பூரர்களுக்காகப் பாடுபடவேண்டும் என்னும் எங்களது அடிப்படைக் கடமையில் கவனம் செலுத்துவதைத் தொடருவோம்,” என்றும் பாட்டாளிக் கட்சி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் லீ சியன் லூங், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக பிரித்தம் சிங்கை நியமித்தார்.

கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்தலைத் தொடர்ந்து, அவரையே மீண்டும் எதிர்க்கட்சித் தலைவராக பிரதமர் லாரன்ஸ் வோங் நியமித்தார்.

இந்நிலையில், நாடாளுமன்றக் குழுவிடம் பொய் சொன்னதற்காகத் தண்டனை பெற்றதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவராக நீடிக்க பிரித்தம் சிங் தகுதியற்றவர் என ஜனவரி 14ஆம் தேதி நாடாளுமன்றம் முடிவு செய்தது.

அதனைத் தொடர்ந்து, திரு சிங்கை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து பிரதமர் வோங் ஜனவரி 15ஆம் தேதி நீக்கினார். அந்தப் பதவிக்கு வேறொரு எம்.பி.யைத் தேர்வு செய்யுமாறு பாட்டாளிக் கட்சிக்கு பிரதமர் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார்.

குறிப்புச் சொற்கள்