சிங்கப்பூர் அரசியலில் கட்சி சாரா, கட்சி சார்ந்த பொறுப்புகளுக்கு இடையில் தெளிவான எல்லையை வரையறுப்பது அவசியம் என்று பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹி டிங் ரூ கூறியுள்ளார்.
அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதம் இரண்டாவது நாளாக நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமையும் (பிப்ரவரி 27) தொடர்ந்தது.
அரசியல் பொறுப்பில் உள்ள ஒருவர், கட்சி சார்ந்த பதவியிலிருந்து கட்சி சார்பற்ற பதவிக்கு மாறும்போது ஜனநாயக நன்மைகளைக் காக்கக் ‘கட்டாய இடைவெளிக் காலத்தை’ (Cooling-off periods) அறிமுகப்படுத்த நாடாளுமன்றத்தில் அறைகூவல் விடுத்தார் திருவாட்டி ஹி.
இது நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் தனிப்பட்ட நலன்களால் ஏற்படக்கூடிய முரண்பாடுகளைத் தவிர்த்துப் பொதுவான நம்பிக்கையைப் பாதுகாக்கவும் உதவும் என்றார் அவர்.
‘‘ஒற்றைக் கட்சி ஆதிக்கம் நம்மை இதுவரை அழைத்து வந்திருந்தாலும், அதுவே எதிர்கால நிலைத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கும் என்று கருத முடியாது,’’ என்றார் திருவாட்டி ஹி.
அவ்வகையில் நாடாளுமன்ற அமைப்புகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களின் பொறுப்புகள், கடமைகள் குறித்து வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டியது அவசியம் எனும் கருத்தையும் முன்வைத்தார்.
இது அவர்களின் முன்னைய தொடர்புகளிலிருந்து விலகி இருக்க உதவும் என்றார் அவர். அத்துடன் தனிமனிதர்கள் மிக விரைவாக பொறுப்புகளை மாற்றுவதையும் அதனால் பொதுமக்களிடையே நம்பிக்கை குறைவதையும் தவிர்க்க முடியும் என்றும் குறிப்பிட்டார் திருவாட்டி ஹி.
அவரின் கருத்துக்குப் பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா உடனடியாகப் பதிலளித்தார்.
தொடர்புடைய செய்திகள்
நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிய இடைவெளிக் காலம் என்பது நேரடியானது; தனிநபர்கள் தங்களின் பொறுப்புகள் சார்ந்த மாற்றத்தை முறையாக அறிவித்து, கடமைகளைச் சரியாகச் செய்தால் பொறுப்புகளை மாற்றிக்கொள்ள முடியும் என்று இரண்டாம் நிதி, தேசிய வளர்ச்சி அமைச்சருமான குமாரி இந்திராணி கூறினார்.

