தேர்தல்: திட்டங்கள் வகுத்து ஆதரவு திரட்டும் எதிர்க்கட்சிகள்

2 mins read
4ca07c88-b48b-4c07-aea3-46337ad98a4c
பொதுத் தேர்தலுக்கு எதிர்கொள்ள திட்டங்களை வகுக்கத் தொடங்கியிருக்கும் எதிர்க்கட்சிகள், தாங்கள் தொகுதி உலா சென்று மக்களை சந்திக்க உள்ளதாகக் கூறின. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம்

தொகுதி மறுவரைவுக்குப் பின் எதிர்க்கட்சிகள் தங்கள் தேர்தல் உத்திகளை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளன. இதில் சில எதிர்க்கட்சிகள் தங்கள் தேர்தல் வாய்ப்புகளை அடக்கி வாசிப்பதுடன் தேர்தல் நிதி திரட்டுவதிலும் இறங்கியுள்ளன.

சிங்கப்பூரின் அடுத்த பொதுத் தேர்தல் இந்த ஆண்டு மத்திமப் பகுதியில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தங்கள் தேர்தல் திட்டங்களை எதிர்க்கட்சிகள் இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன. அத்துடன், தாங்கள் தொடர்ந்து தொகுதி உலா மேற்கொண்டு மக்களை சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கின்றன.

பாட்டாளிக் கட்சியின் ஹர்பீரிட் சிங் நெஹால் மரின் பரேடு குழுத்தொகுதியில் தொகுதி உலா மேற்கொண்டு வருவதைக் காண முடிகிறது. அவர் அங்கு போட்டியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், புதிய மரின் பரேடு- பிரோடல் குழுத்தொகுதியில் மெம்பர்சன் தொகுதியும் இணைக்கப்பட்டிருப்பது தங்களுக்கு கவலை அளிக்கவில்லை என்றார்.

“சொல்லப்போனால், இது எங்கள் மனஉறுதியை மேலும் வலுப்படுத்தியுள்ளது,” என்று அவர் தனது ஃபேஸ்புக் பதிவில் வெள்ளிக்கிழமை (மார்ச் 14ஆம் தேதி) தெரிவித்தார்.

மெக்பர்சன் தொகுதியை கடந்த 2020ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் செயல் கட்சியின் டின் பெய் லிங் 71.74 விழுக்காடு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூத்த வழக்கறிஞரான திரு சிங் பாட்டாளிக் கட்சி என்றுமே போட்டிக்கு அஞ்சியதில்லை என்று அவர் விளக்கினார்.

“நாங்கள் தொகுதியை வலம் வந்து, தொடர்ந்து சிங்கப்பூரர்களுடன் தொடர்பில் இருப்போம். அத்துடன், மேலும் நியாயமான, சமநிலையான அரசியல் சூழலுக்கு நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம்,” என்று திரு சிங் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்