மரின் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் தினமான புதன்கிழமை (ஏப்ரல் 23) பாட்டாளிக் கட்சி போட்டியிடாததால் சில எதிர்க்கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.
2011 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் முதன்முறையாக மக்கள் செயல் கட்சி (மசெக) போட்டியின்றித் தேர்வு கண்டுள்ளது.
2020 பொதுத் தேர்தலில் மரின் பரேட் குழுத்தொகுதியில் பாட்டாளிக் கட்சி போட்டியிட்டு 42.26 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றிருந்தது.
இதையடுத்து, சில எதிர்க்கட்சிகள் சமூக ஊடகங்களிலும் செய்தியாளர்களிடமும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தின.
மக்கள் சக்திக் கட்சியின் தலைமைச் செயலாளர் கோ மெங் செங் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “தெம்பனிஸ் குழுத்தொகுதியில் நான்கு முனைப் போட்டியில் களமிறங்க, மரின் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியில் 130,000 வாக்குகளை பாட்டாளிக் கட்சி பறிகொடுத்துவிட்டது!,” என்று ஏமாற்றத்துடன் பதிவிட்டிருந்தார்.
தெம்பனிஸ் குழுத்தொகுதியில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தலைமை தாங்கும் மசெகவுக்கு எதிராகப் பாட்டாளிக் கட்சி, மக்கள் சக்திக் கட்சி, தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி நான்கு முனைப் போட்டி காண உள்ளன.
இதேபோல், மக்கள் சக்திக் கட்சியின் தலைவர் டெரிக் சிம், மரின் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியில் பாட்டாளிக் கட்சி போட்டியிடாததால் தனது கட்சி வாயடைத்துப் போனதாகச் சொன்னார்.
அதே தினம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் திரு சிம், 44, பாட்டாளிக் கட்சி 1988லிருந்து இதுவரை தெம்பனிஸ் குழுத்தொகுதியில் போட்டியிடவில்லை என்றும் அது கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக மரின் பரேட் குழுத்தொகுதியில் போட்டியிட்டு வருவதாகவும் பதிவிட்டிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
பாட்டாளிக் கட்சியின் சிறந்த வேட்பாளராகக் கருதப்படும் ஹர்ப்ரித் சிங், இத்தனை நாள் மரின் பரேட் தொகுதியில் காணப்பட்டதாகவும் திடீரென கட்சி அங்குப் போட்டியிடாதது முயற்சி வீணானதுக்குச் சமம் என்ற திரு சிம், இது உத்திபூர்வ செயலன்று என்றும் சொன்னார்.
இதற்கிடையே, சிங்கப்பூர் மக்கள் கட்சியின் தலைமைச் செயலாளர் ஸ்டீவ் சியாவும் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். பாட்டாளிக் கட்சியின் முடிவு தமது கட்சிக்கு ஆச்சரியம் தருவதாக அவர் சொன்னார்.
“குடியிருப்பாளர்கள் உணரும் அதே ஏமாற்றத்தைத்தான் நாங்களும் உணர்கிறோம்,” என்றார் அவர்.
இதர கட்சிகள் எடுக்கும் உத்திபூர்வ முடிவுகளை தாம் புரிந்துகொள்வதாகச் சொன்ன திரு சியா, பாட்டாளிக் கட்சியின் முடிவு அங்குள்ள குடியிருப்பாளர்களுக்குதான் அதிக வருத்தத்தை அளித்திருக்கும் என்றார்.
வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதியில் மசெகவுக்கு எதிராகக் களமிறங்கும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி, செய்தியாளர்களைச் சந்தித்தது. அப்போது பேசிய கட்சியின் தலைமைச் செயலாளர் லியோங் மன் வாய், பாட்டாளிக் கட்சி எடுத்த முடிவு சற்று ஏமாற்றம் அளிப்பதாகச் சொன்னார்.
பாட்டாளிக் கட்சி தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங், தமது கட்சி மரின் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என்றும் அது ஒரு கடினமான முடிவு என்றும் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
“தேர்தல் தொகுதி எல்லைகள் மீண்டும் வரையறுக்கப்பட்ட பிறகு, ஒரு சிறிய கட்சியாக நாங்கள் தொடர்ந்து கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. நீண்ட சிந்தனைக்குப் பிறகே எங்கள் கட்சிக்கு எது சரியாக இருக்கும் என்ற முறையில் இந்த முடிவை எடுத்தோம்,” என்று அவர் சொன்னார்.