எதிர்வரும் மே மாதம் 3ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மக்கள் சீர்திருத்தக் கூட்டணி இரண்டு புதிய முகங்களை அறிமுகப்படுத்த உள்ளது.
இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையில் தாதியாகப் பணிபுரியும் 54 வயது திருவாட்டி சரினா அபு ஹசான், தனியார் பள்ளி இயக்குநராக உள்ள திரு நடராஜன் செல்வமணி ஆகியோரே அவ்விருவர்.
மக்கள் சீர்திருத்தக் கூட்டணியின் தலைமைச் செயலாளர் லிம் தியென், ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 20) ஜாலான் பாத்து ஈரச்சந்தை, உணவு அங்காடி நிலையத்துக்குத் தொகுதி உலா சென்றபோது அவ்விருவரையும் அறிமுகம் செய்து வைத்தார்.
“அவர்கள் எங்கு போட்டியிடுவார்கள் என்று நான் சொல்லப்போவதில்லை. ஏனெனில், அது இன்னும் முடிவாகவில்லை. எனினும், சரினா, மணி இருவரும் இதைவிட சிறந்த கட்சியைத் தேர்ந்தெடுத்திருக்க முடியாது,” என்று திரு லிம் தியென் கூறினார்.
திரு சரினா கடந்த 35 ஆண்டுகளாகத் தாதியாகப் பணிபுரிந்து வருகிறார். அவர், ஐந்து ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியில் சேர்ந்ததாகவும் பின்னர் அதிலிருந்து விலகி மக்கள் சீர்திருத்தக் கூட்டணியில் அண்மையில் சேர்ந்ததாகவும் விளக்கினார்.
மக்கள் சீர்திருத்தக் கூட்டணியின் நெறிகள் தம்முடன் ஒத்துப்போவதாக திருவாட்டி சரினா கூறினார். மேலும் சிறப்பான மருத்துவப் பராமரிப்பு முறை, பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு இலவச உணவு வழங்கும் முறை ஆகியவற்றுக்காக தாம் பாடுபடப் போவதாகத் அவர் தெரிவித்தார்
மணி என்று தம்மை அழைப்பது மிகவும் பிடிக்கும் என்ற செல்வமணி, கடந்த 2018ஆம் ஆண்டு முதல் மக்கள் குரல் கட்சியில் தொண்டூழியராகச் சேவையாற்றி வருகிறார்.
இவர் சிங்கப்பூரில் மேம்பட்ட வீடமைப்புக் கொள்கைகளுக்காகவும் இலவசக் கல்விக்காகவும் பாடுபடப் போவதாகத் தெரிவித்தார்.