மக்கள் செயல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் சிங்கப்பூருக்கு அது அதே முடிவுகளைத் தரும் என்று எதிர்க்கட்சிகள் கூறுவது சரியன்று என்று பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை (ஏப்ரல் 28) யுஓபி பிளாசாவில் நடைபெற்ற நண்பகல் உணவு இடைவேளை பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசினார்.
“குழுக்களால் அமைக்கப்பட்ட நிறுவனங்களில் உங்களில் பலர் பணிபுரிகிறீர்கள். குழு வேலையில் ஈடுபட்டு வருகிறீர்கள். குழுக்களிலிருந்து உறுப்பினர்களை அடிக்கடி வெளியேற்றினால் எவ்வளவு முயன்றாலும் முதலில் கிடைத்த முடிவுகளைப் பெற முடியாது,” என்று திருவாட்டி இந்திராணி கூறினார்்.
திருவாட்டி இந்திராணி மக்கள் செயல் கட்சி சார்பில் பாசிர் ரிஸ்-சாங்கி குழுத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
“மசெக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பதிலாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றனர். ஆனால் எண்ணிக்கை மட்டும் முக்கியமல்ல அனுபவமும் திறன்களும் மிகவும் முக்கியம்,” என்றார் திருவாட்டி இந்திராணி.
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் அவர்கள் துரிதமாகச் செயல்பட சில காலம் எடுக்கும் என்றார் அவர்.
ஆனால், எண்ணிக்கை மட்டும் போதுமானது என்றும் யார் வேண்டுமானாலும் நாடாளுமன்ற உறுப்பினராகலாம் என்றும் எதிர்க்கட்சிகள் கருதினால் அவற்றின் வேட்பாளர்களை எங்கு வேண்டுமானாலும் போட்டியிட வைக்கலாம் என்று திருவாட்டி இந்திராணி கூறினார்.
“ஆனால் யார் யார் எங்கெங்கு போட்டியிட வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் கவனம் செலுத்தியுள்ளன. சரியான இடத்தில் சரியான குழுவை நிறுத்தும் முக்கியத்துவத்தை அவை தெரிந்துவைத்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
பிரதமர் லாரன்ஸ் வோங் பலதரப்பட்ட வேட்பாளர்களை மிகச் சரியான முறையில் களமிறக்கி உள்ளதாக அவர் கூறினார்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாவிட்டால் நாடாளுமன்றத்தில் மாற்று கருத்துகள் முன்வைக்கப்படாது என்று எதிர்க்கட்சிகள் சொல்வது சரியன்று என்றார் திருவாட்டி இந்திராணி.
நாடாளுமன்றத்தில் மாற்று கருத்துகள் முன்வைக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.
நாடாளுமன்றத்தில் குறைந்தது 12 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதை உறுதி செய்ய மக்கள் செயல் கட்சி அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தியதை அவர் சுட்டினார்.
அதன்மூலம் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர் என்றார் அவர்.

