ஆக்ககரமான முறையில் ஆகாயப் போக்குவரத்தை நிர்வகிக்க சிங்கப்பூர், மலேசியா ஆய்வு

2 mins read
a5bc7a6c-9dcf-496d-9cb8-5c79074f2b11
சிங்கப்பூர்-மலேசியத் தலைவர்கள் ஓய்வுத்தளச் சந்திப்பிற்குப் பின் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: சாவ்பாவ்

ஆகாயப் போக்குவரத்து நிர்வாகத்தை ஆக்ககரமான முறையில் மேற்கொள்வது குறித்து சிங்கப்பூரும் மலேசியாவும் இணைந்து ஆய்வு நடத்தவுள்ளதாக பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

இருநாடுகளும் சம்பந்தப்பட்ட, இன்னும் தீர்க்கப்படாத விவகாரங்களைப் பற்றிப் பேசுகையில் திரு வோங் இதனைத் தெரிவித்தார்.

மேலும், நீர் வியோக மீள்திறனை மேம்படுத்தும் புதிய உள்கட்டமைப்பு குறித்தும் சிங்கப்பூரும் மலேசியாவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக மிக மோசமான வானிலை மாற்றங்களுக்கு மத்தியில் இந்தப் பேச்சுவார்த்தை நடப்பதாக திரு வோங் சொன்னார்.

என்னதான் இருநாடுகளுக்கும் நீர், ஆகாயத் துறை, நீர் எல்லைகள் ஆகியவற்றைப் பொறுத்தவரை மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், நல்ல அண்டை நாடுகள் என்ற முறையில் இரண்டும் தொடர்ந்து கண்ணியமான முறையில் ஒன்றை மற்றொன்று தொடர்புகொண்டு செயல்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

12வது சிங்கப்பூர்-மலேசியத் தலைவர்கள் ஓய்வுத்தளச் சந்திப்பில் திரு வோங்கும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் வியாழக்கிழமை (டிசம்பர் 4) சந்தித்தனர். இச்சந்திப்பு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

ஆக்ககரமாகச் செயல்படும் நோக்கில் ஒருவொருக்கொருவர் சமமாக மரியாதை அளித்தபடி பேச்சுவார்த்தையைத் தொடருமாறு இரு தலைவர்களும், தங்களின் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியிருப்பதாக திரு வோங் சொன்னார்.

“இரு தரப்பும் சமமாகப் பலனடையும் வகையில் ஆக்ககரமான, நீடிக்கக்கூடிய தீர்வுகளைப் பெற மலேசியாவுடன் இணைந்து செயல்பட ஆவலாக இருக்கிறோம்.

“இந்தப் பேச்சுவார்த்தைகள் நடந்துவரும் அதேவேளையில், நமது நல்லுறவு தொடர்வதையும் நாங்கள் உறுதிப்படுத்துவோம். இந்த விவகாரங்கள், நமது ஒட்டுமொத்த ஒத்துழைப்பைச் சிறுமைப்படுத்தவோ பாதிக்கவோ விடாமல் பார்த்துக்கொள்வோம்,” என்று திரு வோங் விவரித்தார்.

சிங்கப்பூர்-மலேசியத் தலைவர்கள் ஓய்வுத்தளச் சந்திப்பின் இறுதியில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் திரு வோங்கும் திரு அன்வாரும், ஒருவொருக்கொருவர் சமமான மரியாதை அளித்தபடி அனைத்துலகச் சட்டத்துக்கு இணங்கி நட்புமுறையில், ஆக்ககரமான அணுகுமுறையைப் பின்பற்றி தொடர்ந்து இருந்துவரும் இருதரப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண மறுவுறுதிப்படுத்தினர்.

குறிப்புச் சொற்கள்