எண் 38 ஆக்ஸ்லி சாலையில் அமைந்துள்ள சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூவின் வீடு, தேசிய நினைவுச் சின்னமாக பாதுகாக்கப்படுவதற்குத் தகுதியானதா என்பது குறித்து தேசிய மரபுடைமைக் கழகம் ஆய்வு செய்யும்.
அந்த இடம் தேசிய அளவில் வரலாற்றுச் சிறப்புமிக்கதா, மரபுடைமை, கட்டடக் கலை சார்ந்த முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளதா என்பதை அந்த ஆய்வு உறுதிசெய்யும் என்று கழகம் வியாழக்கிழமை (அக்டோபர் 24) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
எண் 38 ஆக்ஸ்லி சாலை குறித்து அமைச்சர்நிலை குழு 2018ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையில், அந்தக் கட்டடம் கட்டடக் கலை, மரபுடைமை, வரலாற்றுச் சிறப்புமிக்க முக்கியத்துவம் வாய்ந்தது என மதிப்பிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அக்கட்டடம் இடிக்கப்படவேண்டும் என்பது திரு லீ குவான் யூவின் விருப்பமாக இருந்தாலும், இடிப்பதைத் தவிர, கட்டடம் புதுப்பிக்கப்பட்டு, வசிக்கக்கூடிய நிலையில் இருப்பதையும் குடும்பத் தனியுரிமை பாதுகாக்கப்படுவதையும் உறுதிசெய்யும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டால் வேறு தெரிவுகளை ஏற்றுக்கொள்ள அவர் தயாராக இருந்ததாகவும் அமைச்சர்நிலைக் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாக கழகம் தெரிவித்தது.
ஆக்ஸ்லி சாலை வீட்டின் தற்போதைய உரிமையாளரான திரு லீ சியன் யாங், வீட்டை இடிப்பதற்கு திங்கட்கிழமை (அக்டோபர் 21) நகர மறுசீரமைப்பு ஆணையத்திடம் விண்ணப்பம் செய்திருந்தார். இருப்பினும், இப்போது அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்வதால், தெரிவுகள் சரியாகவும் முழுமையாகவும் ஆராயப்படுவதை அது தவிர்த்துவிடும் என்று கழகம் கூறியது.
இந்நிலையில், ஆக்ஸ்லி சாலை வீடு, தேசிய நினைவுச் சின்னமாகப் பாதுகாக்கப்படுவதற்குத் தகுதியானதா என்பதை தேசிய மரபுடைமைக் கழகம் ஆய்வு செய்யும் வேளையில், விண்ணப்பப் பரிசீலனையை ஒத்தி வைத்துள்ளதாக வியாழக்கிழமை (அக்டோபர் 24) வெளியிட்ட தகவலில் ஆணையம் குறிப்பிட்டது.
கட்டடத்திற்கும் அதன் அமைவிடத்திற்குமான தெரிவுகள் அமைச்சர்நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டன.
ஒட்டுமொத்தக் கட்டடத்தையும் தக்கவைப்பது, கீழ்த்தளத்தில் உள்ள உணவருந்தும் அறையை மட்டும் தக்கவைப்பது அல்லது கட்டடத்தை முழுமையாக இடிப்பது ஆனால் அந்தப் பகுதியை மாற்றுப் பயன்பாட்டுக்காக (உதாரணமாக, பூங்கா அல்லது மரபுடைமை நிலையம்) நியமிப்பது உள்ளிட்டவை தெரிவுகளில் அடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
எதிர்கால அரசாங்கம் இந்தத் தெரிவுகளைப் பற்றியும் பின்னர் வெளியிடப்படக்கூடிய மற்ற தெரிவுகளைப் பற்றியும் சிந்தித்து, திரு லீ குவான் யூவின் ஆசைகளைக் கருத்தில்கொண்டு, நன்கு ஆராய்ந்து ஒரு முடிவை எடுக்கவேண்டும் என்பதே நோக்கம்.