ஆஸ்திரேலியாவில் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் ஆப்டஸ் நிறுவனம் செப்டம்பர் 18ஆம் தேதி வலைத்தளக் கட்டமைப்பில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டது.
அச்சமயத்தில் அவசரச் சேவைகளுக்கான தொடர்பு எண்களில் தடை ஏற்பட்டது. அவசரச் சேவைகளின் உதவியை நாட முயன்ற மூவர் உதவிகள் கிடைக்காமல் அவர்களது இல்லங்களிலேயே மாண்டனர்.
சிங்டெலின் துணை நிறுவனம் ஆப்டஸ் ஆகும்.
இந்நிலையில், உதவி கிடைக்காமல் மாண்டவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமர் லாரன்ஸ் வோங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய ஒளிபரப்பு நிறுவனமான ஏபிசிக்கு பிரதமர் வோங் அளித்த நேர்காணல் திங்கட்கிழமை (அக்டோபர் 6) வெளியானது. அதில் தனது இரங்கலைத் திரு வோங் தெரிவித்திருந்தார்.
“பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரின் கோபம், உணர்ச்சி ஆகியவற்றை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. தங்களது அன்புக்குரியவர்களை இழப்பது எளிதானது இல்லை,” என்று பிரதமர் வோங் குறிப்பிட்டார்.
“தெமாசெக் நிறுவனத்தின் மூலம் நாங்கள் பங்குதாரர்களாக இருக்கலாம். இருப்பினும் நிறுவனங்களின் செயல்பாடுகளில் அரசாங்கம் தலையீடாது. சிங்கப்பூர் நிறுவனங்கள் வெளிநாடுகளில் செயல்படும்போது அந்தந்த நாடுகளின் சட்டங்களை மதித்து நடக்கும்,” என்று பிரதமர் வோங் கூறினார்.
ஆஸ்திரேலியாவில் பிரச்சினை ஏற்பட்டபோது சிங்டெல் தலைமை அதிகாரிகள் அங்கு விரைந்ததைத் திரு வோங் சுட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
“விசாரணைக்கு வேண்டிய அனைத்தும் சிங்டெல் செய்துதரும், விசாரணையின் முடிவில் தவறுகள் கண்டறியப்பட்டு அவை சரிசெய்யப்படும். இழந்த நம்பிக்கையை விரைவில் நிறுவனம் பெறும்,” என்றும் திரு வோங் கூறினார்.
செப்டம்பர் 18ஆம் தேதி ஏற்பட்ட 13 மணி நேரம் சேவைத் தடையால் கிட்டத்தட்ட 600 அவசரச் சேவைகளின் உதவி அழைப்புகள் பாதிக்கப்பட்டன.
மாண்ட மூவரும் மூத்தோர். அவர்களில் இருவர் பெர்த்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் அடிலெய்டைச் சேர்ந்தவர்.
நான்காவதாக ஒரு 8 வாரப் பிள்ளையின் மரணம் பதிவானது. ஆனால் அது சேவைத் தடைக்குத் தொடர்பில்லாதது என்று பின்னர் அறிவிக்கப்பட்டது.