ஆஸ்திரேலியாவில் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் சிங்டெலின் துணை நிறுவனமான ஆப்டஸ் செப்டம்பர் 18 (வியாழக்கிழமை) வலைத்தளக் கட்டமைப்பில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டது. அச்சமயத்தில் அவசரச் சேவைகளுக்கான தொடர்பு எண்களில் தடை ஏற்பட்டுள்ளது. அவசரச் சேவைகளின் உதவியை நாட முயன்ற மூவர், பலனில்லாமல் அவர்களது இல்லங்களில் மரணமடைந்ததாக பிறகு கண்டறியப்பட்டது.
அந்த 13 மணிநேர வலைத்தள சேவைத் தடை, தென் ஆஸ்திரேலியா, மேற்கு ஆஸ்திரேலியா, வடக்குப் பிரதேசங்கள் ஆகிய வட்டாரங்களில் 600 வாடிக்கையாளர்களைப் பாதித்திருக்கலாம். இந்த விவரங்களை ஆப்டஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் ருயி தெரிவித்தார்.
ஆரம்பகட்ட விசாரணையில் ஆப்டஸ், நடைமுறையில் உள்ள செயல்பாடுகளை கடைப்பிடிக்காமல் கட்டமைப்பின் மேம்பாட்டுப் பணிகளை நடத்தியதாகத் தெரியவந்துள்ளது என்றும் திரு ருயி மேலும் கூறினார்.
அவசரச் சேவைகளான காவல்துறை, தீயணைப்புப் படை, மருத்துவ வாகனம் (ஆம்புலன்ஸ்) ஆகியவற்றுக்கு 000 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளவேண்டும். அவ்வாறு சேவைத்தடையின்போது அழைத்தோரை விசாரிக்க பொதுநல அமைப்புகள் சோதனை நடத்தியபோது இறந்துபோன மூவர் கண்டறியப்பட்டனர்.
ஆப்டஸ் நிறுவனத்தின் செயல்பாட்டுக்கு தலைமை நிறுவனமான சிங்டெல் மன்னிப்பு கேட்டுக்கொண்டது. சிங்கப்பூர் பங்குச் சந்தையில் வெளியிடப்பட்ட அறிக்கையில், மீண்டும் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய முழுமையான உள்விசாரணை நடத்தப்படும் என்று சிங்டெல் குழும தலைமை நிர்வாக அதிகாரி யுவன் குவான் மூன் தெரிவித்தார்.
சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் குழுமம் வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்டது. மறைந்தோரின் குடும்பங்களுக்கும் அன்புக்குரியோருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் சிங்டெல் குழுமத்தின் சார்பில் திரு யுவன் தெரிவித்தார்.
மறைந்தோரில் 68 வயது மாது ஒருவரும், 49 மற்றும் 74 வயதான இரு ஆடவர்களும் அடங்குவர் என்று மேற்கு ஆஸ்திரேலிய காவல்துறை கூறியது. ஆஸ்திரேலிய தொடர்புத்துறை அமைச்சர் அனிகா வெல்ஸ், ஆப்டஸ் வலைத்தள மேம்பாடு சார்ந்த விசாரணை முடிவுற்றதும், செயல்முறைகளில் சட்டப்படி மாற்றங்கள் செய்யப்படும் என்று செப்டம்பர் 22 (திங்கட்கிழமை) அறிவித்தார்.