வயது தொடர்பான வாய் செயல்பாட்டுக் குறைபாடான வாய்வழித் தளர்வுக்கான பரிசோதனையானது, சிராங்கூன் பலதுறை மருந்தகம் 2025 நவம்பர் பிற்பகுதியில் திறக்கப்பட்டதிலிருந்து அதன் மேம்படுத்தப்பட்ட தளர்வுப் பராமரிப்பில் இணைக்கப்பட்டுள்ளது. இந்தச் சேவையை வழங்கும் என்எச்ஜி ஹெல்த் குழுமத்தின்கீழ் உள்ள முதல் பல்துறை மருந்தகம் இதுவாகும்.
மொத்தம் 11 முதியவர்கள் லேசானது முதல் மிதமான தளர்வு கொண்டவர்களாக அடையாளம் காணப்பட்டனர், அவர்களில் 10 பேருக்கு வாய்வழித் தளர்வு காரணமாகப் பல் சார்ந்த பிரச்சினைகள் இருப்பது கண்டறியப்பட்டதாகக் குடும்ப மருத்துவரும் மூத்த ஆலோசகரும் என்எச்ஜி பல்துறை மருந்தகங்களின் மருத்துவச் சேவைகளுக்கான துணை இயக்குநருமான டாக்டர் டேவிட் இங் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தார்.
20க்கும் குறைவான பற்களைக் கொண்டிருப்பது மற்றும் கடினமான உணவுகளை மெல்லுவதில் சிரமம் ஆகியவை அடங்கிய இந்தப் பிரச்சினைகள், உடல் தளர்வுடன் வலுவாகத் தொடர்புடையவை. மேலும் இது கீழே விழுவதற்கான அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.
“வாய்வழித் தளர்வின் விளைவாக ஒருவருக்கு 20க்கும் குறைவான இயற்கையான பற்கள் இருக்கும்போது, அது அவர் உணவை மெல்லுவதைக் கடினமாக்குகிறது. எனவே, அவர்கள் மிகவும் மென்மையான அல்லது அதிகமாக வேகவைத்த உணவுகளை உட்கொள்ளத் திரும்பலாம். இது குறைந்த அளவிலான உணவு வகைகளுக்கு வழிவகுக்கிறது, இதனால் ஊட்டச்சத்துக் குறைபாடு அல்லது குறைவான புரத உட்கொள்ளல் ஏற்படுகிறது,” என்று டாக்டர் இங் கூறினார்.
“இது தசையிழப்பு மற்றும் கீழே விழுவதற்கான அதி அபாயம் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.” என்றார் அவர்.
வாய்வழித் தளர்வு மோசமடைவது வேகமானதல்ல என்பதாலும், குறைந்து வரும் வாய் செயல்பாடுகள் பேச்சைப் பாதிக்கலாம் என்பதாலும் இது சமூகப் பங்கேற்பைப் படிப்படியாகத் தவிர்ப்பதற்கு வழிவகுத்து, சமூகத் தனிமைப்படுத்தல் மற்றும் உளவியல் வீழ்ச்சிக்குப் பங்களிக்கிறது என்று டாக்டர் இங் மேலும் கூறினார்.
பல்துறை மருந்தகத்தில் 10 நோயாளிகள் மட்டுமே வாய்வழித் தளர்வு உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டாலும் இந்த எண்ணிக்கை பிரச்சினையின் உண்மையான அளவைப் பிரதிபலிக்கவில்லை, இது இங்கு குறைவாகவே கண்டறியப்படுகிறது என்று என்எச்ஜி பலதுறை மருந்தகங்களின் முதன்மை பல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஹோலி கோ கூறினார்.
“எங்களிடம் அதற்கான தரவுகள் இன்னும் இல்லை,” என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
2014ஆம் ஆண்டில் வாய்வழித் தளர்வு என்ற கருத்துரு முதன்முதலில் வரையறுக்கப்பட்ட ஜப்பானில், வயது தொடர்பான இந்த நிலை 40 விழுக்காடு முதியோரைப் பாதிக்கிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
சிங்கப்பூரில், முதியோரிடையே வெற்றிகரமான முதுமையை ஆதரிக்கும் குறிக்கோளுடன், ஒட்டுமொத்த தளர்வைக் கணிக்கும் ஒரு காரணமாக வாய்வழித் தளர்வு குறித்த அங்கீகாரம் வளர்ந்து வருகிறது.
சிராங்கூன் பல்துறை மருந்தகத்தின் ‘ஸ்ட்ரைவ்’ திட்டத்தின்கீழ், தளர்வுக்கு முந்தைய நிலையில் உள்ள அல்லது மிக லேசான தளர்வுடன் வாழும் 65 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடைய மூத்தோருக்குப் பராமரிப்பு ஒருங்கிணைப்பாளர்களால் பொருத்தமான உணவு மற்றும் உடற்பயிற்சி குறித்து அறிவுறுத்தப்படும்.
மேலும் சமூக உடற்பயிற்சி திட்டங்களுக்கும் அவர்கள் பரிந்துரைக்கப்படுவார்கள். தேவைப்பட்டால், தீங்கு விளைவிக்கக்கூடிய அல்லது இனி பலனளிக்காத ஏதேனும் மருந்துகளைக் குறைக்கலாமா அல்லது நிறுத்தலாமா என்பதைத் தீர்மானிக்க, மருந்து மதிப்பாய்வுக்காக அவர்கள் மருந்தியல் நிபுணரிடம் பரிந்துரைக்கப்படுவார்கள்.
என்எச்ஜி மருந்தகங்கள் அவற்றில் புதிய தளர்வு அணுகுமுறையை ஜூலையில் கேலாங் பல்துறை மருந்தகத்துக்கும் அதன்பிறகு ஏப்ரல் 2027க்குள் அதன் மீதமுள்ள எட்டு பல்துறை மருந்தகங்களுக்கும் விரிவுபடுத்தும் என்று டாக்டர் இங் கூறினார். இந்தக் குழுமம் 2022 முதல் தளர்வுத் திட்டத்தைக் கொண்டிருந்தாலும், தளர்வுக்கு முந்தைய மற்றும் மிக லேசான தளர்வுப் பிரிவுகளில் உள்ள நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்குவதிலேயே அது கவனம் செலுத்தியது.
2025 ஜூலையில் தொடங்கப்பட்ட டான் டோக் செங் மருத்துவமனையின் துடிப்புடனும் வலுவாகவும் இருப்பதற்கான தசை ஆரோக்கிய மருந்தகத்தில், ‘சார்கோபீனியா’ அல்லது வயது தொடர்பான தசையிழப்புக்கான ஒட்டுமொத்த மதிப்பீட்டின் ஒரு பகுதியாக வாய்வழித் தளர்வும் சேர்க்கப்பட்டது.
2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை, சிங்கப்பூர் தேசிய பல் மருத்துவ நிலையம் அதன் ‘ஓரல் ஹெல்த் மூவ்மென்ட் 8020’) திட்டத்தின் மூலம் வாய்வழித் தளர்வுக்கான பரிசோதனையையும் தொடங்கியது, இது சிங்கப்பூரர்கள் 80 வயதைக் கடந்தும் குறைந்தது 20 இயற்கையான பற்களைத் தக்கவைத்துக்கொள்ள ஊக்குவிக்கிறது.

