ஆர்ச்சர்ட் ரோட்டில் கைகலப்பில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த 25 வயது கவின் ராஜ் கண்ணனுக்குத் திங்கட்கிழமை (ஜூன் 30) ஈராண்டுகள், மூன்று மாதச் சிறைத் தண்டனையும் மூன்று பிரம்படிகளும் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.
கலவரத்தில் ஈடுபட்டதாகத் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை கவின் ஒப்புக்கொண்டார்.
கடந்த 2023 ஆகஸ்ட் 20ஆம் தேதி கான்கார்ட் ஹோட்டல், கடைத்தொகுதியில் உள்ள ரூமர்ஸ் எனும் கேளிக்கை விடுதியில் அச்சம்பவம் நடந்தது.
கலவரக் கும்பலில் கவினுடன் 10 ஆடவர்கள் இருந்ததாகவும் அவர்கள் அனைவரும் முகம்மது இஸ்ரத் முகம்மது இஸ்மாயில், 29, என்ற அப்பாதுகாவலருக்கு எதிராகத் திரண்டதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
அஸ்வின்பச்சன் பிள்ளை சுகுமாரன் என்று அடையாளம் காணப்பட்ட கலவரக் கும்பலைச் சேர்ந்த மற்றொரு உறுப்பினர், இஸ்ரத் கைவிட்ட கத்தியை எடுத்து அவரைப் பலமுறை குத்தினார் என்றும் அதில் படுகாயம் அடைந்த இஸ்ரத் மருத்துவமனையில் உயிரிழந்தார் என்றும் அவை கூறுகின்றன.
கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ள அஸ்வின், 30, மீதான வழக்கு நிலுவையில் உள்ளது.