ஆர்ச்சர்ட் ரோடு சண்டை: கத்தி ஏந்தியிருந்ததாக ஆடவர்மீது குற்றச்சாட்டு

2 mins read
2137b04d-98b7-4b84-872f-a5eae5e29cb3
படம்: - தமிழ்முரசு

ஆர்ச்சர்ட் ரோட்டில் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடந்த சண்டையில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஆடவர் ஒருவர் மீது ஆயுதம் ஏந்தி சண்டையில் ஈடுபட்டதாக வியாழக்கிழமை நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.

32 வயது சசிகுமார் பக்கிரிசாமி, ஆர்ச்சர்ட் ரோட்டில் சண்டையில் ஈடுபட்ட கும்பலில் இருந்ததாகவும் அவர் கத்தி ஏந்தி சண்டையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தக் கும்பல், முகமது இஸ்ராட் முகமது இஸ்மாயிலை கத்தியால் தாக்கியதாக சொல்லப்படுகிறது.

இந்தக் கும்பலால் தாக்கப்பட்ட அந்த ஆடவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

சசிகுமாரின் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடந்தது. இதே வழக்குடன் தொடர்புடைய வேறொரு வழக்கு விசாரணை கடந்த திங்கட்கிழமை நடந்தது.

அந்தக் கும்பலில் இருந்ததாக நம்பப்படும் சிஜேஷ் அசோகன், 25; மெர்வின் வெரில் டாவுத், 28; பாலகிருஷ்ணா சுப்ரமணியம், 32 ஆகிய மூவர் மீது பயங்கரமான ஆயுதத்துடன் சண்டையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

கவிந்த் ராஜ் கண்ணன், 24, அருண் கலியபெருமாள், 32, மனோஜ்குமார் வேலாயநாதம், 31, ஸ்ரீதரன் இளங்கோவன், 28, விஷ்ணு சூரியமூர்த்தி, 27 ஆகியோர் மீது இதே குற்றச்சாட்டு செவ்வாய்க்கிழமை சுமத்தப்பட்டது.

அதே கும்பலைச் சேர்ந்தவரான அஸ்வேன் பச்சான் பிள்ளை சுகுமாரன் எனும் 29 வயது ஆடவர், கொலைக் குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார்.

30 செ.மீ. நீளமுள்ள ரொட்டி நறுக்கும் கத்தியால் விஷ்ணு சூரியமூர்த்தி எனும் 27 வயது ஆடவரின் மார்பில் முகமது ஷாருல்நிஸாம் உஸ்மான் எனும் 30 வயது ஆடவர் தாக்கியதாகக் கூறப்பட்டது.

ஆயுதம் கொண்டு தாக்கி வேண்டுமென்றே காயப்படுத்தியதாக ஷாருல்நிஸாம்மீது செவ்வாய்க்கிழமை குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த சண்டையுடன் தொடர்புடைய 12 பேரின் வழக்கு விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அஸ்வேனுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

ஷாருல்நிஸாமுக்கு ஏழு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ அபராதமோ பிரம்படியோ இவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட தண்டனையோ விதிக்கப்படலாம்.

ஆயுதமேந்தி சண்டையில் ஈடுபட்ட குற்றத்திற்கு 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன் பிரம்படியும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்