ஆர்ச்சர்ட் ரோடு சண்டை: ஐவருக்குச் சிறை, பிரம்படி

1 mins read
403e6257-03f8-4f55-98f6-dce7c8c59f8b
குற்றம் நடந்த இடத்தில் காவல்துறையினர். - கோப்புப்படம்: ஷின்மின்

ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள கான்கோர்ட் ஹோட்டல் முன்பாக கடந்த 2023ஆம் ஆண்டு நடந்த சண்டையின்போது பாதுகாவலரைச் சரமாரியாகத் தாக்கிய ஐவருக்குச் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 25) சிறைத்தண்டனையும் பிரம்படியும் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.

அவர்களில் ஸ்ரீதரன் இளங்கோவன், 30, மனோஜ்குமார் வேலையாநாதன், 32, சஷிகுமார் பக்கிரிசாமி, 34, ஆகிய மூவரும் மீண்டும் குற்றம் புரிந்தவர்கள்.

கடந்த 2023 ஆகஸ்ட் 20ஆம் தேதி நடந்த அம்மோதலின்போது, அதே கும்பலைச் சேர்ந்த 30 வயதான அஸ்வின் பச்சான் பிள்ளை சுகுமாரன், பின்னர் முகம்மது இஸ்ரத் முகம்மது இஸ்மாயில், 29, என்ற அப்பாதுகாவலரைக் கொன்றதாகச் சொல்லப்படுகிறது.

ஸ்ரீதரனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைவாசத்துடன் ஆறு பிரம்படிகளும் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது. மனோஜ்குமாருக்கு இரண்டரை ஆண்டுச் சிறையும் நான்கு பிரம்படிகளும், சஷிகுமாருக்கு ஈராண்டுச் சிறையும் இரண்டு பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.

அக்கும்பலைச் சேர்ந்த 28 வயது ராஜா ரி‌ஷி இரண்டரை ஆண்டுகளைச் சிறையில் கழிக்க வேண்டும். அத்துடன், அவருக்கு நான்கு பிரம்படிகளும் தரப்படும்.

புத்தென்வில்லா கீத் பீட்டர், 26, என்ற இன்னொருவருக்கு 26 மாதச் சிறையும் மூன்று பிரம்படிகளும் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரர்களான இந்த ஐவரும் பிப்ரவரி 13ஆம் தேதியன்று கலகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டனர்.

கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள அஸ்வின்மீதான வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்