தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆர்ச்சர்ட் ரோடு சண்டை: பாதுகாப்பு ஊழியரைத் தாக்கியதை ஒப்புக்கொண்ட ஐவர்

2 mins read
a6c99551-78ec-485b-bc3e-12dbd56b0404
(கடிகார முள் திசையில் இடமிருந்து) ஸ்ரீதரன் இளங்கோவன், மனோஜ்குமார் வேலையாநாதன், சஷிகுமார் பக்கிரிசாமி, ராஜா ரிஷி, புதென்வில்லா கீத் பீட்டர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

2023ஆம் ஆண்டில் ஆர்ச்சர்ட் ரோடு கான்கோர்ட் ஹோட்டலுக்கு வெளியே நடைபெற்ற சண்டையில் தொடர்புடைய ஐந்து பேர், முன்னாள் பாதுகாப்பு ஊழியரைச் சரமாரியாகத் தாக்கியதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டனர்.

இவர்களுடைய கும்பலைச் சேர்ந்த ஒருவர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீதரன் இளங்கோவன், 30, மனோஜ்குமார் வேலையாநாதன், 32. சஷிகுமார் பக்கிரிசாமி, 34, ஆகிய மூவரும் அந்த சமயத்தில் ரகசிய கும்பலின் உறுப்பினர்களாக இருந்தனர். புதென்வில்லா கீத் பீட்டர், 26, ராஜா ரிஷி, 28 ஆகியோர் இதர இரண்டு பேர்.

வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 13) அன்று சிங்கப்பூரர்களான ஐவரும் கலவரத்தில் ஈடுபட்ட ஒரு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டனர்.

ஆறாவது நபரான 30 வயது அஸ்வின் பச்சான் பிள்ளை சுகுமாரன் மீது முன்னாள் பாதுகாப்பு ஊழியரான முஹமட் இஸ்ரட் முஹமட் இஸ்மாயிலை, 29, கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

ஆறு பேரும் கலவரத்தில் ஈடுபட்ட இதர உறுப்பினர்களும் 2023 ஆகஸ்ட் 20ஆம் தேதி விடியற்காலை கான்கார்ட் ஹோட்டல், கடைத் தொகுதியில் உள்ள ருமர்ஸ் மதுபானக் கூடத்திற்குச் சென்றதாக நீதிமன்ற ஆவணங்களில் அரசாங்க துணை வழக்கறிஞர்கள் கேத்தி சூ, பிரையன் டான் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அதிகாலை 4.45 மணியளவில் முன்னாள் பாதுகாப்பு ஊழியர்களான திரு இஸ்ராட், முஹம்மட் ஷாருல்நிஸாம் உஸ்மான் அங்கு வந்தனர். திரு இஸ்ராட் ஊழியர்களுக்கு திருமண அழைப்பிதழை வழங்க வந்திருந்தார்.

இருவரும் மற்றொரு ரகசிய கும்பலைச் சேர்ந்த உறுப்பினர்கள் என்று அரசாங்க வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். ஒரு கும்பல், மற்றொரு கும்பலைப் பார்த்ததும் பதற்றம் அதிகரித்தது. ஷாருல்நிஸாமும் இஸ்ராட்டும் கத்திகளுடன் தயாராகினர்.

இதற்கிடையே மதுபானக் கூடம் காலை 6.00 மணிக்கு மூடப்பட்டு அங்கிருந்தவர்கள் கிராமட் லேன் வழியாக வெளியேறினர். திரு இஸ்ராட்டும் ஷாருல்நிஸாமும் கலகக் கும்பலைச் சேர்ந்தவர்களை அநாகரிகமாகத் திட்டினர். பின்னர் கும்பல் உறுப்பினர்களுக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

கைகலப்பில் ஷாருல்நிஸாம், கத்தியால் மூவரை வெட்டினார். பின்னர் ஷாருல்நிஸாம், இஸ்ராட்டை கலவரக் கும்பல் துரத்தியது.

இஸ்ராட்டை சூழ்ந்த மனோஜ் குமார், புதென்வில்லா, ராஜா ஆகியோர் அவரை சரமாரியாகத் தாக்கினர்.

அங்கிருந்து தப்பிச்சென்றபோது இஸ்ராட்டின் கத்தி கை நழுவியது. அப்போது ராஜா, மனோஜ் குமார், ஸ்ரீதரன் ஆகியோர் இஸ்ராட்டை எட்டி உதைத்தனர்.

அஸ்வின் அந்த சிறிய கத்தியை எடுத்து இஸ்ராட்டை பல முறை குத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் கும்பல் அங்கிருந்து சென்றுவிட்டது. ருமர்ஸ் ஊழியர்கள் வரவழைத்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் இஸ்ராட், டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் 7.00 மணியளவில் இஸ்ராட் உயிரிழந்தார்.

மனோஜ் குமார், ஸ்ரீதரன், சஷிகுமார், புதென்வில்லா, ராஜா ஆகிய ஐவருக்கும் பிப்ரவரி 25ஆம் தேதி தண்டனை விதிக்கப்படவிருக்கிறது.

முன்னதாக 2024 டிசம்பரில் அப்போது 31 வயதான ஷாருல்நிஸாமுக்கு இரண்டு ஆண்டுகள், ஒன்பது மாதம் சிறைத் தண்டனை, 12 பிரம்படி விதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்