1980களில் ஆர்ச்சர்ட் ரோட்டில் மக்களிடையே மிகப் புகழ்பெற்ற கடைத்தொகுதியாக விளங்கிய ‘த சென்டர் பாயின்ட்,’ அதன் பாதிப் பகுதியை ஒட்டுமொத்த விற்பனைக்கு விட்டுள்ளதாகப் புதன்கிழமை (ஜனவரி 7) அறிவித்துள்ளது.
ஏழு மாடிகள் கொண்ட அந்தக் கட்டடத்தின் உரிமையாளர்களால் குத்தகைக்கு விடப்பட்ட பாதிப் பகுதியின் ஆரம்ப விலை $418 மில்லியன் ஆகும். அந்தக் கட்டடத்தின் விற்பனை சாராத பகுதியில் தற்போது 151 சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளன.
ஆயினும் விற்பனைக்கு விடப்பட்ட பகுதியில் 66 சில்லறை விற்பனைக் கடைகளும் 66 வீடுகளைக் கொண்ட ஒரு குடியிருப்பு வளாகமும் அடங்கும்.
அந்தப் பகுதி பல்வகைப் பயன்பாட்டுக்கும் உகந்தது என அதனை விற்பனை செய்யும் மூலதனம், முதலீடு சார்ந்த வர்த்தக நிறுவனமாகிய ‘சாவில்ஸ் சிங்கப்பூர்’ கூறியுள்ளது. மேலும், ஒட்டுமொத்த விற்பனையில் தற்போதுள்ள உரிமையாளர்கள், 30 விழுக்காடு வரை லாபம் ஈட்ட வாய்ப்புள்ளது என அது தெரிவித்துள்ளது.
சென்டர்பாயின்ட் கட்டடத்தைக் கடந்த 1983ஆம் ஆண்டில் ‘ஃப்ரேஸர்ஸ் பிராப்பர்ட்டீஸ்’ நிறுவனம் மேம்பாட்டுப் பணிகளுக்குப்பின் திறந்தது. அதில் இரண்டு நிலப்பரப்புகள் இணைந்துள்ளன.
கூட்டுரிமைப் பட்டா மேலாண்மைக் கழகம் வழங்கும் தரவுகளின்படி (MCST) அந்த இரண்டு நிலங்களின் எண்கள் 1304, 1298 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் 1304 எண்கொண்ட நிலம் ஒட்டுமொத்த விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.

