வரி ஏய்ப்பு செய்த மருத்துவருக்குக் கூடுதல் வரி செலுத்த உத்தரவு

வரி ஏய்ப்பு செய்த மருத்துவருக்குக் கூடுதல் வரி செலுத்த உத்தரவு

2 mins read
0f157ac3-21fe-43e6-be5f-52cfff7d8988
மருத்துவர் ஒருவர், சராசரி சம்பளத்தைவிட குறைவாக தமக்குச் சம்பளமாக போட்டுக் கொண்டார். - கோப்புப் படம்: சாவ்பாவ்

மருத்துவர் ஒருவர், நிறுவனத்திடமிருந்து மாத வருமானமாக 5,000 முதல் 6,000 வெள்ளி வரை மட்டுமே பெறுவதாகக் கூறி கூடுதலாகக் கிடைத்த தொகைக்கு வரி செலுத்தவில்லை.

இதையடுத்து அதற்குரிய வரியைச் செலுத்துமாறு சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அந்த மருத்துவர் ஆண்டுக்குச் சராசரியாக இரண்டு மில்லியன் வெள்ளிக்கும் அதிகமாகப் பெற்ற கூடுதல் வருமானத்திற்கு தனிநபர் வருமான வரியைச் செலுத்தவில்லை.

தனது நிறுவனம் 17 விழுக்காடு நிறுவன வரியைச் செலுத்திவிட்டதால், தமக்குக் கிடைத்த கூடுதல் தொகைக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்றும் அது ‘பங்குதாரர் கடன்’ என்ற வரம்பிற்குள் வருவதால் வரியைத் தவிர்க்க முடியும் என்றும் அவர் வாதிட்டார்.

ஆனால் இதை ஏற்றுக்கொள்ள மறுத்த ஆணையம், அதிகப்படியான தனிநபர் வருமான வரியிலிருந்து தப்பிக்க இது ஒரு வழி என்று சுட்டிக்காட்டியது.

ஒரு மில்லியன் வெள்ளியைத் தாண்டும் வருமானத்திற்கு 24 விழுக்காடு என்ற உச்சபட்ச தனிநபர் வருமான வரி விதிக்கப்படும் என்றும் அது குறிப்பிட்டது.

கடந்த 2013 முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான அவரது வரித் தாக்கல்களைத் தீவிரமாக ஆய்வு செய்த ஆணையம், வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காகவே உள்ள வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 33ஐப் பயன்படுத்தி அந்த மருத்துவருக்கு கூடுதல் வரியைச் செலுத்த உத்தரவிட்டது.

அவரது ஒட்டுமொத்த வருமானத்திற்கும் கூடுதல் வரி விதிக்கப்பட்ட நிலையில் அதனை எதிர்த்து மருத்துவர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

ஆனால் அவரது வழக்கைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், அவர் செலுத்த வேண்டிய வரியை உறுதிசெய்தது.

குறிப்புச் சொற்கள்