மின்சிகரெட்டுகளுக்கு எதிராக சிங்கப்பூர் எடுத்துள்ள நிலைப்பாட்டைக் குறைகூறிய ஒரு புகையிலை சார்ந்த அரசுசாரா அமைப்பு, புகையிலை உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதியாக இருக்கிறது என்று உள்துறை அமைச்சர் கா.சண்முகம் கூறியுள்ளார்.
புகையிலை அபாயங்களைக் குறைப்பதற்கு வாதாடும் ஆசிய பசிபிக் கூட்டமைப்பு (காஃப்ரா), மின்சிகரெட்டைத் தடைசெய்வது மறைமுக விற்பனையைத் தூண்டும் என்றும் புகைப்பதற்கான பாதுகாப்பான மாற்றுவழிகள் கிடைப்பதைத் தடுக்கிறது என்றும் கூறியது.
மின்சிகரெட் புகைப்பது போதைப்பொருள் விவகாரமாகக் கருதப்படும் என்று தேசிய தினப் பேரணி உரையில் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியதற்குப் காஃப்ரா பதிலளித்தது.
ஒட்டுமொத்த அபாயத்தைக் குறைக்க புகையிலை அல்லது போதைப்பொருளைக் கட்டுப்படுத்தப்பட்ட விதத்தில் பயன்படுத்துவதை காஃப்ரா முன்வைக்கிறது.
சொங் பாங்கில் நடைபெற்ற சமூக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான அமைச்சர் சண்முகம், காஃப்ராவின் கருத்து பற்றி செய்தியாளர்களிடம் பேசினார்.
புகையிலையால் ஏற்படும் ஆபத்தைக் குறைப்பதாகக் கூறி மின்சிகரெட் கருவிகளை முன்னிறுத்தும் ஆர்வலர் அமைப்பு காஃப்ரா என்று அவர் குறிப்பிட்டார்.
சிகரெட்டுகளை விட பாதுகாப்பான மாற்றுவழியாக மின்சிகரெட்டுகள் இருப்பதாகக் கூறி புகையிலை நிறுவனங்களுக்கு ஆதரவாக அந்த அமைப்பு பேசுவதாகவும் அவர் சொன்னார்.
காஃப்ராவின் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் அனைத்துலகப் புகையிலை, நிக்கோட்டின் மாநாட்டில் அடிக்கடி பேசியிருப்பதைச் சுட்டிய திரு சண்முகம், அனைத்துலகப் புகையிலை நிறுவனங்களின் ஆதரவு அதில் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“என்னைப் பொறுத்தவரை அது புகையிலை நிறுவனங்களின் வெளிப்பாடு. மின்சிகரெட்டுகள் மூலம் நிக்கோட்டினை நுழைக்க எடுக்கப்படும் முயற்சி. மற்ற பொருள்கள் மின்சிகரெட்டில் கலக்கப்பட்டாலும் அவர்களுக்குக் கவலை இல்லை,” என்றார் அவர்.
மின்சிகரெட்டுகளைத் தடைசெய்வது அது தொடர்பான வர்த்தகத்தைப் பாதிக்கும் என்றும் சிங்கப்பூரின் சுகாதாரம் பற்றிய கவனம் அமைப்புக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

