எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான லெஸ்லி இங் சோங் லிச்சிற்கு 18 மாதங்கள் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடை ஆகஸ்ட் 28ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.
தொழில்முறை மருத்துவர்களை மேற்பார்வையிடும் சிங்கப்பூர் மருத்துவ மன்றம், தனது இணையதளத்தில் இடைக்கால உத்தரவுக் குழுவின் (ஐஓசி) அறிவிப்பு ஒன்றை கடந்த புதன்கிழமை வெளியிட்டது.
அதில் மருத்துவர் லெஸ்லி இங் சோங் லிச்சிற்கு 18 மாதங்கள் இடைக்காலத் தடை விதிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், அவருக்கு ஏன் இந்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது என்பது பற்றிய விவரங்கள் எதுவும் அதில் இடம்பெறவில்லை எனச் சொல்லப்படுகிறது.
ஒழுங்குமுறை விசாரணை முடிவதற்கு அல்லது தொடங்குவதற்குமுன் ஐஓசி கூட்டப்படும் என்றும் அந்தக் கூட்டத்தில் விசாரணைக்குமுன் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து முடிவுசெய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
“பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும், அவர்களின் நலனுக்காகவும் மருத்துவர் இங்கின் மருத்துவப் பதிவு 18 மாதங்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. உடனடியாக இந்த ரத்து நடைமுறைக்கு வருகிறது. இந்தக் காலகட்டத்தில் அவர் மருத்துவர் பணியை மேற்கொள்ளக்கூடாது,” என ஐஓசி வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மருத்துவர் இங், ‘ஐலேண்ட் ஆர்த்தோபெடிக்ஸ்’ குழுமத்தில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார்.
தொடர்புடைய செய்திகள்
அந்தக் குழுவிற்கு மவுன்ட் அல்வெர்னியா மருத்துவ நிலையம், கிளெனகிள்ஸ் மருத்துவ நிலையம், மவுண்ட் எலிசபெத் நொவீனா நிபுணத்துவ நிலையம், மவுண்ட் எலிசபெத் மருத்துவ நிலையம் ஆகியவற்றில் மருந்தகங்கள் உள்ளன.

