எண் 38 ஆக்ஸ்லி சாலையில் உள்ள வீட்டை உடனடியாக இடிக்க திரு லீ சியன் யாங்கிற்கு அனுமதி வழங்கப்பட்டால், கருத்தில் எடுத்துக்கொள்ளக்கூடிய மற்ற தெரிவுகள் தவிர்த்துவிடப்படும் என்று கலாசார, சமுக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் கூறியிருக்கிறார்.
“இந்தக் கட்டத்தில் எந்தத் தெரிவையும் தவிர்த்துவிடவோ நிராகரிக்கவோ கூடாது என்று நாங்கள் நினைக்கிறோம்,” என்று திரு டோங் வியாழக்கிழமை (அக்டோபர் 24) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் குறிப்பிட்டார்.
ஆக்ஸ்லி சாலை வீட்டை இடிக்கும் பணிகளுக்கு, திரு லீ சியன் யாங் கட்டட, கட்டுமான ஆணையத்திடமிருந்து அனுமதி பெறவேண்டும். அதோடு, நகர மறுசீரமைப்பு ஆணையத்திடமிருந்து திட்டமிடல் அனுமதியையும் அவர் பெறவேண்டும்.
அண்மையில், சில கலந்துரையாடல்களில் ஆக்ஸ்லி சாலை குறித்து முக்கியமாகப் பேசப்பட்டதை திரு டோங் குறிப்பிட்டார்.
அமரர் லீ குவான் யூவின் மகள் டாக்டர் லீ வெய் லிங், அக்டோபர் 9ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 69. அவரின் மறைவுக்குப் பிறகு, ஆக்ஸ்லி சாலை வீட்டில் இப்போது யாரும் தங்குவதில்லை.
“சிங்கப்பூரர்களிடையே இந்த விவகாரத்தின் தொடர்பில் பல்வேறு கண்ணோட்டங்கள் நிலவுகின்றன,” என்றார் திரு டோங்.
“இந்த விவகாரத்தை நாம் திறந்த மனப்பான்மையுடன் அணுகுவது முக்கியம். அதோடு, நமது தெரிவுகளையும் வெளிப்படையாக வைத்திருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
“பாதுகாப்பு உத்தரவு செய்யப்பட்டால், அனைத்து தெரிவுகளுக்கான சாத்தியமும் தொடர்ந்து ஆராயப்படலாம். இதன் மூலம் அமைச்சர்நிலைக் குழு அறிக்கையில் அடையாளம் காணப்பட்ட வெவ்வேறு தெரிவுகளையும் மற்ற தெரிவுகளையும் பற்றி ஆராய அரசாங்கத்திற்கு நேரம் இருக்கும்,” என்றார் திரு டோங்.
தொடர்புடைய செய்திகள்
தேசிய மரபுடைமைக் கழகத்தின் அமைவிட, நினைவுச் சின்னங்கள் பாதுகாப்பு ஆலோசனை வாரியம் (Preservation of Sites and Monuments Advisory Board) ஆய்வை மேற்கொள்ளும் என்று சட்ட இரண்டாம் அமைச்சருமான திரு டோங் கூறினார்.
வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த நிபுணர்கள் அதில் அடங்குவர்.

