ராபர்ட்சன் கீ அருகே பெண்ணைக் கடித்த நீர்நாய்

ராபர்ட்சன் கீ அருகே பெண்ணைக் கடித்த நீர்நாய்

1 mins read
c2d84d91-040f-44e4-9ede-6b94429bae82
ராபர்ட்சன் கீக்கு அருகே நீர்நாய் கடித்த பெண்ணுக்கு அதிகாரிகள் உதவி வழங்கினர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் ஆற்றுக்கு அருகே காணப்பட்ட நீர்நாய்கள் பெண் ஒருவரைக் கடித்ததை அடுத்து தேசியப் பூங்காக் கழகம் அந்த வட்டாரத்திற்குச் செல்வதற்கான வழியை ஞாயிற்றுக்கிழமை (மே 11) மூடியுள்ளது.

அந்தச் சம்பவம் ராபர்ட்சன் கீயில் உள்ள ஜியாக் கிம் பாலத்துக்கு அருகே நேர்ந்ததாக லியன்ஹ சாவ்பாவ் சீன நாளேடு தெரிவித்தது.

குறிப்பிட்ட அந்த வட்டாரத்தில் பளபளப்பான தோலுடைய நீர்நாய்கள் அவற்றின் குட்டியுடன் காணப்பட்டதாகத் தேசியப் பூங்காக் கழகம் சொன்னது. ஆனால் எத்தனை நீர்நாய்கள் சம்பவத்துடன் தொடர்புபடுத்தப்பட்டன என்பதை அது குறிப்பிடவில்லை.

பல்வேறு நிபுணர்கள் கொண்ட நீர்நாய் செயல்பாட்டுக் குழு, கடிபட்ட பெண்ணுக்கு உதவி வழங்கியதாகக் கழகம் குறிப்பிட்டது. பெண்ணின் குடும்பத்துடனும் கழகம் தொடர்பில் இருக்கிறது.

பெண்ணுக்கு எத்தனை வயது, அவர் எந்தளவுக்குக் காயமடைந்தார் என்பதைக் கழகம் தெரிவிக்கவில்லை. 

பொதுமக்களின் பாதுகாப்பை வலுப்படுத்த கழகம் கண்காணிப்பை அதிகரித்ததோடு நீர்நாய்கள் குறித்து எச்சரிக்கும் அறிவிப்புப் பலகைகளையும் ஆங்காங்கே நிறுவியது.

நீர்நாய்களிடமிருந்து பாதுகாப்பான தூரம் தள்ளியிருக்கும்படியும் அவற்றைத் தொடவோ துரத்தவோ வேண்டாம் என்றும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்