நம்மிடையே இருக்கும் பிணைப்பு இல்லம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது: பிரதமர்

நம்மிடையே இருக்கும் பிணைப்பு இல்லம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது: பிரதமர்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

08 Sep 2024 - 9:30 pm

2 mins read

இந்த நாடு ஒரு சிறு சிவப்புப் புள்ளியாக இருந்தபோதிலும் சிங்கப்பூரின் வெவ்வேறு பகுதிகளில் தனிச்சிறப்பு அம்சங்கள் உள்ளன என்று பிரதமர் லாரன்ஸ் வோங் ஞாயிற்றுக்கிழமையன்று (செப்டம்பர் 8) கூறினார்.

“அவை நாம் வளர்ந்து வந்த இடங்கள், நமக்கு பழக்கமான இடங்கள், வளரும் பருவத்தில் நாம் பகிர்ந்துகொண்ட அனுபவங்கள் ஆகியவற்றுடன் நம்மைச் சுற்றியுள்ளவர்களுடன் நமக்கிருக்கும் உணர்வுபூர்வமானப் பிணைப்புகள்,” என்று அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய பிரதமர், “முடிவில் இவை இருக்கும் கட்டமைப்புப் பற்றியோ வன்பொருள் பற்றியோ அல்ல, நம்மிடையே இருக்கும் பிணைப்புகளே இது நமது இல்லம் என்ற உணர்வைக் கொடுக்கிறது,” என்று விளக்கினார்.

சமூக வெளி, பொதுச் சேவைகள், சில்லறை விற்பனைக் கடைகள் ஆகியவற்றை ஒரே கூரையின்கீழ் கொண்டு வந்துள்ள ஒன் பொங்கோல் மையத்தைத் திறந்து வைத்து பிரதமர் பேசினார். ஒருகாலத்தில் வளர்ச்சியடையாதப் பகுதி என்று குறிப்பிடப்பட்ட வட்டாரத்தில் தற்பொழுது பெரும் வளர்ச்சி ஏற்பட்டிருப்பது குறித்தும் அங்கு பெரிய அளவில் இளம் குடும்பங்கள் இருப்பதையும் பிரதமர் பெருமையுடன் சுட்டினார்.

பொங்கோலில் 1980களில் தமது அனுபவங்களையும் திரு வோங் பகிர்ந்துகொண்டார். அந்தக் காலகட்டத்தில் அங்கு கடல் வாழ் உணவு வகைகளை உட்கொண்டது, 2000களில் சீனப் புத்தாண்டுக் காலத்தில் உறவினரைச் சந்திக்கக் குடும்பத்தாரை வாகனத்தில் ஓட்டிச் சென்றது போன்ற இன்பமான நினைவுகளை அவர் பகிர்ந்தார்.

பொங்கோலில் புதிய மேம்பாடுகள் வரவிருப்பதைச் சுட்டிய பிரதமர், பொங்கோல் வட்டார விளையாட்டு மைதானம், பொதுப் போக்குவரத்து இணைப்புகள் 2026ஆம் ஆண்டில் வரவுள்ளதையும் நினைவுகூர்ந்தார். அதில் பொங்கோல் கிழக்கு ரயில் இவ்வாண்டு இறுதியில் செயல்பட இருப்பதையும் தீவின் குறுக்கு ரயில் தடம் வரவிருப்பதையும் பிரதமர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
பிரதமர்பொங்கோல்எம்ஆர்டி