தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கு வெளிப்புறக் கற்றல் அனுபவப் பயிலரங்கு

3 mins read
8d7351bc-4ac3-49a0-8dae-f565a780e780
தங்கள் பள்ளிக்கால நினைவுகள் குறித்துக் கலந்துரையாடிய ஆசிரியர்கள். - படம்: லாவண்யா வீரராகவன்

பாலர் பள்ளி மாணவர்களுக்கு முழுமையான, பயனுள்ள கற்றலை அளிப்பதற்குரிய அனுபவங்களை வழங்கும் ‘ஆசிரியர்களுக்கான பயிலரங்கு’, சனிக்கிழமை (ஜூலை 19), கேலாங் ஈஸ்ட் பொது நூலகத்தில் நடைபெற்றது.

தமிழ்மொழி கற்றல், வளர்ச்சிக் குழுவின் ஏற்பாட்டில் ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிலரங்கு இம்முறை ‘பாலர் பள்ளி மாணவர்களுக்கு அர்த்தமுள்ள வெளிப்புறக் கற்றல் நடவடிக்கைகளை வடிவமைப்பது’ எனும் கருப்பொருளில் நடைபெற்றது.

இப்பயிலரங்கில், பிள்ளைகளின் வெளிப்புறக் கற்றல் அனுபவங்களை மேம்படுத்த, குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள இடங்களையும் வசதிகளையும் திறம்படப் பயன்படுத்தும் உத்திகள் பகிரப்பட்டன.

பயிலரங்கின் ஒரு பகுதியாக, ஆசிரியர்கள் வெளிப்புற இடங்களுக்குச் சென்று கற்றல் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தனர். தொடர்ந்து, அக்கற்றலுக்கு ஏற்ற பாடத்திட்டங்களை ஒன்றிணைந்து வடிவமைத்தனர்.

பயிலரங்கின் முதல் அங்கமாக எஸ் ஆர் நாதன் மனித மேம்பாட்டுப் பள்ளியின் மூத்த விரிவுரையாளர் (ஆரம்பகாலக் குழந்தைப்பருவக் கல்வி) காவேரி, வெளிப்புறக் கற்றல் நடவடிக்கைகளின் முக்கியத்துவம், அவற்றை நடைமுறைப்படுத்தும் உத்திகள் குறித்துப் பகிர்ந்துகொண்டார். அந்த அங்கத்தில் ஆசிரியர்கள் அவரவர் பாலர் பள்ளிப் பருவத்தில் நடைபெற்ற வெளிப்புறக் கற்றல் அனுபவங்கள், அவை அளித்த மகிழ்ச்சி, கற்றுத்தந்த பாடங்கள் ஆகியவற்றையும் பகிர்ந்து கொண்டனர்.

கடைகளுக்கு அழைத்துச் சென்றால் மாணவர்களுக்கு என்னென்ன சொல்லிக்கொடுக்கலாம் என்பது குறித்து ஆலோசித்த ஆசிரியர்கள்.
கடைகளுக்கு அழைத்துச் சென்றால் மாணவர்களுக்கு என்னென்ன சொல்லிக்கொடுக்கலாம் என்பது குறித்து ஆலோசித்த ஆசிரியர்கள். - படம்: லாவண்யா வீரராகவன்

தொடர்ந்து, தலைசிறந்த பாலர் பள்ளி விருது பெற்ற, விருதுக்கு நியமனம் செய்யப்பட்ட வழிநடத்தும் ஆசிரியர்கள் எழுவருடன் குழுக்களாகப் பிரிந்து வெளிப்புற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.

ஆசிரியர்கள், சாலை, கடைகள், உணவங்காடி நிலையம், சமூகத் தோட்டம் ஆகிய இடங்களுக்குச் சென்று, அங்கு மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் சாத்தியக்கூறுகள் குறித்துக் கலந்துரையாடினர்.

பின்னர் ஒவ்வொரு குழுவினரும் நடவடிக்கைக்குமுன், நடவடிக்கையின்போது, நடவடிக்கைக்குப்பின் என மூன்று பகுதிகளாகப் பிரித்துப் பாடத்திட்டங்களை வகுத்தனர்.

ஆசிரியர்கள் வடிவமைத்த பாடத் திட்டங்கள் கற்றல் வளர்ச்சிக் குழு இணையத்தளத்தில் பதிவேற்றப்படும் என்றார் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் உறுப்பினரான திருமதி நித்தியா தர்சினி ஆதித்திய ஒளி.

“மாணவர்களின் இயக்கத் திறன் மேம்படுவது தொடங்கி, வாழ்வியல் கூறுகள், பிறருடன் பழகுதல், பொறுமை, உதவுதல், பகிர்தல் உள்ளிட்ட குணங்களைக் கற்றுக்கொள்ளுதல், சூரிய ஒளியினால் கிட்டும் வைட்டமின் ‘டி’ என வெளிப்புறச் சூழலால் விளையும் நன்மை அளப்பரியது. அச்சூழல் சிந்தனையைத் தூண்டி, ஆர்வத்தையும் விதைக்கும். அந்த அனுபவத்தைக் குறிக்கோளுடன், தரமான இருவழிக் கற்றல் முறையில் மேம்படுத்த இப்பயிலரங்கில் வகுக்கப்பட்ட பாடத்திட்டங்கள் உதவும். இதற்குப் பங்களித்தது மகிழ்ச்சியான அனுபவம்,” என்றார் பயிலரங்கில் முதன்மை உரையாற்றிய காவேரி.

“மாணவர்களின் கற்பனைத் திறன், மொழிவளம் எனப் பலவற்றை மேம்படுத்தும் வெளிப்புறக் கற்றல் முறையை வடிவமைக்கும் இப்பயிலரங்கில் பங்களித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி,” என்றார் ஒரு குழுவினரை வழிநடத்திய ஆசிரியை கார்த்திகா.

பேருந்து நிலையத்துக்குச் சென்று, அங்குள்ள அம்சங்களைக் கொண்டு கற்பிப்பதன் உத்திகளை ஆராய்ந்தோம். பல ஆசிரியர்களுடன் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டது புதிய கண்ணோட்டங்களை அளித்தது,” என்றார் பாலர் பள்ளி ஆசிரியை அஃப்ரா‌ தஹ்சீன், 25.

கடைகளுக்குச் செல்வது, வழியில் பார்க்கும் பொருள்கள் குறித்து எவ்வாறு கேள்விகள் கேட்கலாம் என்பதை ஆலோசித்தோம். இங்கு பல்வேறு பள்ளிகளிருந்து வந்திருந்த ஆசிரியர்களின் அணுகுமுறைகளைத் தெரிந்துகொண்டேன். பயிலரங்கில் கற்ற உத்திகளை நடைமுறைப்படுத்த ஆர்வம் கொண்டுள்ளேன்,” என்று சொன்னார் ஆறாண்டுகளாக பாலர் பள்ளி ஆசிரியர் பணியிலிருக்கும் புவனேஸ்வரி.

குறிப்புச் சொற்கள்