டிபிஎஸ் வங்கி 2024ஆம் ஆண்டில் முன்னில்லாத அளவுக்கு அதிக லாபம் ஈட்டியது.
அதன் முழு ஆண்டு நிகர லாபம் 11 விழுக்காடு உயர்ந்து $11.4 பில்லியனாகப் பதிவானது.
அதன் தலைமை நிர்வாகியான பியுஷ் குப்தாவின் சம்பளமும் உயர்ந்தது. 2024ஆம் ஆண்டில் அவர் $17.58 மில்லியன் சம்பளம் ஈட்டினார்.
இது, 2023ஆம் ஆண்டில் அவர் ஈட்டிய வருமானத்தைவிட அதிகம் என்று டிபிஎஸ் வங்கி வியாழக்கிழமை (மார்ச் 6) வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, வியாழக்கிழமை காலை 10.12 மணியளவில் டிபிஎஸ் பங்கு விலை 1 விழுக்காடு ஏற்றம் கண்டு $46.09ஆகப் பதிவானது.
“ஒட்டுமொத்த அடிப்படையில் டிபிஎஸ் வங்கி சிறப்பாகச் செயல்பட்டது. அதன் தொழில்நுட்ப ஆற்றலும் மீள்திறனும் மேம்பட்டன. இதன் காரணமாக 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024ஆம் ஆண்டில் டிபிஎஸ் வங்கியின் மதிப்பீட்டு அறிக்கை மேம்பட்டது,” என்று டிபிஎஸ் தெரிவித்தது.
டிபிஎஸ் வங்கியின் செயல்பாடு மேம்பட்டு அதன் லாபம் உயர்ந்ததைக் கருத்தில்கொண்டு திரு குப்தாவுக்குக் கூடுதல் சம்பளம் வழங்கப்பட்டதாக வங்கி கூறியது.
டிபிஎஸ் வங்கிக்கு ஏற்பட்ட மின்னிலக்கச் சேவை இடையூறுகள் காரணமாக 2023ஆம் ஆண்டில் அவரது சம்பளம் 27 விழுக்காடு குறைந்தது. அந்த ஆண்டில் அவர் $11.2 மில்லியன் ஈட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் திரு குப்தாவின் 2024ஆம் ஆண்டு சம்பளம் 14 விழுக்காடு ஏற்றம் கண்டதாக டிபிஎஸ் வங்கி தெரிவித்தது.
ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 4,000 தற்காலிக ஊழியர்களை அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆட்குறைப்பு செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் திரு குப்தா கடந்த பிப்ரவரி மாதம் தெரிவித்தார்.
ஊழியர்கள் செய்யும் சில வேலைகளைத் தற்போது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி செய்துவிடலாம் என்றும் இதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியிருந்தார்.
கடந்த 15 ஆண்டுகளாக டிபிஎஸ் வங்கிக்குத் தலைமை தாங்கிய திரு குப்தா பணி ஓய்வுபெற இருக்கிறார். 2009ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அவர் டிபிஎஸ் வங்கியில் இணைந்தார்.