சிங்கப்பூரில் உள்ள சிராங்கூன் எம்ஆர்டி நிலையத்தில் ஒரு பெண்ணை மானபங்கம் செய்த வெளிநாட்டவர் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பித்து நாட்டைவிட்டு வெளியேறினார்.
ஆனால் கடந்த மார்ச் மாதம் சிங்கப்பூர் திரும்பிய ஷாங் யாங், 34, என்ற சீன நாட்டவர் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு விசாரணையில் புதன்கிழமை (மே 7) அன்று அவருக்கு மூன்று வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அப்போது, தன் மீது சுமத்தப்பட்ட ஒரு மானபங்கக் குற்றச்சாட்டை அவர் ஒப்புக் கொண்டார்.
அவருக்குத் தண்டனை விதிக்கப்படும்போது மற்றொரு மானபங்கக் குற்றச்சாட்டையும் நீதிபதி கவனத்தில் எடுத்துக் கொண்டார்.
கடந்த 2018 ஆகஸ்ட் 22ஆம் தேதி குற்றச்செயல் நடந்தது. கட்டுமான ஊழியரான ஷாங், சிராங்கூன் எம்ஆர்டி நிலையத்தில் லிட்டில் இந்தியா செல்வதற்காக ரயிலுக்குக் காத்திருந்த பெண்ணை நெருங்கிச் சென்று அரைக்கால் சட்டைமீது கைவைத்து தடவினார்.
ஷாங், இரண்டாது முறையாகவும் பின்னால் இருந்து அந்தப் பெண்ணை மானபங்கப்படுத்தினார்.
நீதிமன்ற விசாரணையில் அரசுத் தரப்பு துணை வழக்கறிஞரான ஜோர்டி கே, முதல் சம்பவம் நடந்த ஒரு நிமிடத்திற்குள்ளாகவே இரண்டாவது சம்பவமும் நடந்தது என்றார்.
தொடர்புடைய செய்திகள்
இதில் பாதிக்கப்பட்ட பெண் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.