தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெளிநாட்டு ஊழியர்களின் பங்களிப்பைச் சிறப்பித்த விருதுகள்

3 mins read
5fc9e736-3511-466f-8c0a-c82832dc41f6
வெளிநாட்டு ஊழியர்கள் இணைந்து வரைந்த சுவரோவியத்தின் ஒரு பகுதியை வெளிநாட்டு ஊழியர் நிலைய நிர்வாக இயக்குநர் மைக்கல் லிம் திறந்து வைத்தார். - படம்: லாவண்யா வீரராகவன்

கட்டுமானப் பணியிடத்தில் நிறுவனமும் நிபுணர்களும் வலியுறுத்தும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முழுவதுமாகவும் சரியாகவும் பின்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர் திரு சுப்பிரமணியன் வீரமணி, 26.

கடந்த மூன்றரை ஆண்டுகளாகக் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுவரும் திரு வீரமணி, நிறுவனம் ஏற்பாடு செய்த பாதுகாப்பு அடிப்படைகள் குறித்த பயிலரங்கில் பங்கேற்றார். அதில் கற்ற அனைத்தையும் தம்முடன் பணியாற்றும் 15 பேருக்கும் வலியுறுத்திச் சொல்வதையும் அவர்களை அவ்வப்போது கவனித்துக்கொள்வதையும் அவர் வழக்கமாக வைத்துள்ளார்.

தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டத்திலிருந்து வந்துள்ள திரு வீரமணி, “தொலைதூரத்திலிருந்து வந்து பணியாற்றுகிறோம். பணியைச் சிறப்பாகச் செய்வது போலவே, தற்பாதுகாப்பும் முக்கியம். சிறு விபத்து ஏற்பட்டாலும் இழப்பு இழப்புதான். குடும்பத்தினரை மனத்தில் வைத்து அனைவரும் பாதுகாப்புடன் பணியாற்ற வேண்டும்,” என்றார்.

தம்முடன் பணியாற்றுவோர் வயதில் மூத்தோராகவோ, அனுபவம் அதிகமானவராகவோ இருந்தாலும், அன்போடும் அக்கறையோடும் தான் சொல்வதாக அவர்கள் காதுகொடுத்துக் கேட்பதாகத் திரு வீரமணி குறிப்பிட்டார்.

மேலும், அவர் தமது நிறுவனம் வாரந்தோறும் ஏற்பாடு செய்யும் கலந்துரையாடல்களிலும் பங்கேற்றுப் பேசி வருகிறார்.

இந்நிலையில், பாதுகாப்பை வலியுறுத்தும் திரு வீரமணியுடன் குழுவை வழிநடத்துதல், ஒற்றுமை, தலைமைத்துவப் பண்பு, பணியிடத்தில் சீராகச் செயல்பட பங்களித்தல் எனப் பல்வேறு அம்சங்களில் சிறந்து விளங்கும் 12 வெளிநாட்டு ஊழியர்களுக்கு விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது வெளிநாட்டு ஊழியர் நிலையம்.

சூன் லீயிலுள்ள வெளிநாடு ஊழியர் பொழுதுபோக்கு நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) மாலை நடைபெற்ற ஆண்டு விழாவில் அவ்விருதுகள் வழங்கப்பட்டன. கலைநிகழ்ச்சிகளும் விளையாட்டுப் போட்டிகளும் அவ்விழாவில் இடம்பெற்றன. ஏறத்தாழ பத்தாயிரம் பேர் பங்கேற்ற அவ்விழா, பிற வெளிநாட்டு ஊழியர் நிலையங்களிலும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது

“ஒன்றிணைந்து கட்டமைப்போம், ஒன்றிணைந்து கொண்டாடுவோம்’ எனும் கருப்பொருளில் நடந்த மே தின, ஆண்டு விழாக் கொண்டாட்ட விழாவில் சிங்கப்பூரின் 60ஆவது ஆண்டை முன்னிட்டு 50 ஊழியர்கள் இணைந்து வரைந்த சுவரோவியம் திறந்து வைக்கப்பட்டது. 

கடந்த மே 25, 26ஆம் தேதிகளில் தொண்டூழியர்கள், மாணவர்களின் ஆதரவுடன் ஊழியர்கள் வரைந்த இந்த ஓவியம், சிங்கப்பூரின் 60 ஆண்டுகால வளர்ச்சி, அதில் வெளிநாட்டு ஊழியர்கள், இல்லப் பணிப்பெண்களின் பங்களிப்பு ஆகியவற்றைச் சித்திரிக்கின்றன.

‘ஒன்றிணைந்து அடித்தளம் அமைத்தல், தியாகத்தின் வலிமை, உணவுவழி பண்பாட்டுப் பரிமாற்றம் ஆகிய மூன்று கருப்பொருள்களில் அமைந்த கதைகளை அந்த ஓவியங்கள் வெளிப்படுத்துகின்றன.

தொடக்கக் கால வீவக கட்டடங்கள் தொடங்கி கரையோரப் பூந்தோட்டங்கள் முதலிய நவீன கட்டுமானங்கள், வரவிருக்கும் சாங்கி விமான நிலைய ஐந்தாம் முனையம் எனப் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய அந்த 11 மீட்டர் நீள ஓவியத்தை வெளிநாட்டு ஊழியர் நிலைய நிர்வாக இயக்குநர் மைக்கல் லிம் திறந்து வைத்தார்.

“சிங்கப்பூரின் கட்டமைப்பில் ஊழியர்களின் பங்கு இன்றியமையாதது. அவர்கள் சமூகத்தில் ஒன்றிணைந்து செயல்படுவதும், சமூகத்தில் அனைவரும் அவர்களுடன் ஒன்றிணைவதும் அவசியம்,” என்றார் திரு லிம்.

“கட்டுமானத் துறையின் நெருக்கடியான காலகட்டங்களில் நிலையம், நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் ஆதரவளிக்கிறது. வேலையிடத்திலும், சமூகத்திலும் சிறந்து விளங்கும் ஊழியர்களை ஊக்குவிக்க விருது வழங்க முடிவெடுக்கப்பட்டது. அவர்களை ஒருநாள் பொழுதுபோக்குப் பயணம் அழைத்துச் செல்லும் திட்டமும் உள்ளது,” என்று அவர் சொன்னார்.

மேலும், தொடர்ந்து இடம்பெறும் முன்னெடுப்புகளின் விளைவுகளைக் காணமுடிவதாகக் குறிப்பிட்ட அவர், இவ்வாண்டு நிகழ்ச்சியில் அதிகமான அளவு உள்ளூர்க்காரர்களும் வெளிநாட்டினரும் பங்கேற்றதையும் சுட்டினார். 

குறிப்புச் சொற்கள்